×

ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு: மக்களை பற்றி சிந்திக்காத ஆட்சிக்கு முற்றுப்புள்ளி

கரூர்: தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளை,  குறைகளை சிந்திக்காத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’’ என்று ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக பேசினார். கருர் மாவட்டம் அரவக்குறிச்சி  தொகுதிக்கு உட்பட்ட ஈசநத்தம் கிராமத்தில் நேற்று நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில்   தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கூட்டத்தில் பெண்கள், இளைஞர்கள், மாணவ-மாணவிகள், விவசாயிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தில் நடக்கும் அக்கிரம  ஆட்சி, அலங்கோல, சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி  வைக்க வேண்டும் என ஊராட்சி சபை கூட்டங்களில் மக்களிடம் பேசி  வருகிறோம். மத்தியில் ஆளும் மதவாத  ஆட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த ஊராட்சி சபை  கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆனால், ஸ்டாலினுக்கு  கிராமம் தெரியுமா, கிராமத்திற்கு போய் இருக்கிறாரா, கிராமத்தை  பார்த்திருக்கிறாரா என  எடப்பாடி கேட்கிறார். நான் அவர்களுக்கு பதில்  கூறுகிறேன். நான் செல்லாத  கிராமமே இல்லை. உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது ஊராட்சி  தலைவர்களை ஒருங்கிணைத்து  மக்களின் குறைகளை கேட்க 4 மண்டலமாக  பிரித்து உள்ளாட்சி பிரதிநிதிகள் குழு அமைத்து  மக்கள் பிரச்னைகளை  கேட்டேன்.
ஒரு ஊராட்சிக்கு ₹20 லட்சம் ஒதுக்கி கிராம  வளர்ச்சிக்கு பணிகள் செய்ய உத்தரவிட்டேன். 12,617 ஊராட்சிகளில்  லைப்ரரி ஏற்படுத்தினேன். அதில் ஈசநத்தம் ஊராட்சி சிறந்த  ஊராட்சியாக விருது பெற்றது. நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக  இருந்தபோது விருது வழங்கப்பட்டது.

எடப்பாடிக்கு சேலத்தை தவிர  எந்த ஊரை தெரியும். நான் எங்கு போனாலும் ஸ்டாலின் வருகிறார். தளபதி  வருகிறார் வருகிறார் என கூறுகிறார்கள். எடப்பாடியை  சேலத்தில் இருப்பவர்களை தவிர யாருக்காவது தெரியுமா, என்னை  தமிழகத்தில் மூலைமுடுக்கெல்லாம் தெரியும். அந்த அளவுக்கு நான்  மக்களோடு பழகியவன், அவர்களது உணர்வுகளை புரிந்து  கொண்டவன்.   தி.மு.க.  ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் சரியாக நடத்தப்பட்டது. ஆனால் இப்போது  ஆளுங்கட்சி, உள்ளாட்சி தேர்தல் நடத்தாததற்கு தி.மு.க.  தேர்தலுக்கு தடை வாங்கி  விட்டதாக பொய் கூறுகிறார்கள். பொய் சொன்னாலும்  பொருத்தமாக சொல்லவேண்டும். உள்ளாட்சி தேர்தலை முறையாக  நடத்த வேண்டும்.  அதற்கான இட ஒதுக்கீட்டை முறையாக அறிவித்து தேர்தல் நடத்த  வேண்டும். அதை செய்யாததால்தான், இடஒதுக்கீட்டை முறையாக செய்து தேர்தல்  நடத்த கோர்ட்டில் முறையிட்டுள்ளோம்.

நீதிமன்றம் இடஒதுக்கீட்டை முறைப்படுத்தி தேர்தல்  நடத்த உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டும் தேர்தலை நடத்தவில்லை. இதனால் கோர்ட் அவமதிப்பு வழக்கு கூட வந்தது.  அப்போதுகூட தேர்தலை நடத்தவில்லை. ஏனெனில் தி.மு.க. வெற்றி பெற்றுவிடும் என கருதி தேர்தல்  நடத்தவில்லை. தற்போது தமிழகத்தில் நடைபெறுவது  ஜெயலலிதாவால் உருவாக்கிய ஆட்சி. அவரது மறைவால் பழனிசாமி இன்று  முதல்வராக உள்ளார். முதல்வராகிவிட்டதால் செல்வாக்கு  பெற்றுவிட்டவராக அவர் நினைத்துகொள்கிறார்.

தமிழக மக்கள் என்ன  பிரச்னைகளை சந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்பது மக்களுக்கு  தெரியும். ஆனால் இந்த அரசு கரப்ஷன், கமிஷன், கலெக்‌ஷன் என்ற  அடிப்படையில் நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் பிரச்னைகளை,  குறைகளை சிந்திக்காத ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எனவே, இதற்கு நீங்கள்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

சிடி, பென்டிரைவில் ஜெயலலிதா பதிந்துள்ளார்
சின்னதாராபுரம் ஊராட்சி சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘‘பிப்ரவரி 17ம் தேதி ஊராட்சி சபை கூட்டத்தை முடிக்கும்போது இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் கூட்டமாக இருக்கும். தி.மு.க. ஆட்சிக்கு ஆரம்பபுள்ளியாக இருக்கும். அமைச்சர்கள் ஊழல் செய்து குவித்த சொத்து விவரங்கள் அடங்கிய பட்டியலை ஜெயலலிதா சிடி, பென் டிரைவில் பதிவிட்டு வைத்துள்ளார். அதை கைப்பற்றவே கொடநாட்டில் கொலை, கொள்ளை நடந்துள்ளது’’ என்றார்.

‘கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’
ஈசநத்தத்தில்  ஊராட்சி சபை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மு.க.ஸ்டாலின் காரில் சின்னதாராபுரம் ஊராட்சி சபைக்கு  புறப்பட்டார். வழியில் அரவக்குறிச்சி தாலுகா  அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி கொண்டிருந்தனர். இதைப்பார்த்த மு.க.ஸ்டாலின் காரை நிறுத்தி அவர்களை சந்தித்தார்.  பின்னர், அவர்கள் மத்தியில் ஸ்டாலின் பேசும்போது, ``ஜாக்டோ ஜியோ  அமைப்பினராகிய நீங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல கட்டங்களாக போராடி வருகிறீர்கள். உங்கள்  கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என நான்  சட்டமன்றத்தில் வலியுறுத்தி உள்ளேன். ஆனால் இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. தி.மு.க. ஆட்சி அமைந்ததும் உங்களது  நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்’’ என்று உறுதி அளித்தார்.

ஓ.பி.எஸ் யாகம் நடத்தியது ஏன்?
மு.க.ஸ்டாலின்  பேசுகையில், ‘‘11 எம்.எல்.ஏ. வழக்கு  உச்சநீதிமன்றத்தில் ஊசலாடி கொண்டிருக்கிறது. அதில் இருந்து  தப்பித்துக்கொள்ளத்தான் கோட்டையில் யாகம் ஓபிஎஸ் நடத்தி உள்ளார்.  நான் யாகம் நடத்தவில்லை. சாமி கும்பிட்டேன் என்கிறார். உங்க வீட்டில் யாகம் நடத்து, சாமி கும்பிடு. கோட்டை என்ன உங்க வீட்டு கோட்டையா?.., மக்கள் பணம்... மக்கள் கோட்டை’’ என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,speech ,panchayat council meeting , Panchayat council meeting, DMK leader MK Stalin
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...