×

ரஷ்ய கடல் பகுதியில் 2 சரக்கு கப்பல்களில் தீ விபத்து : இந்தியர் உட்பட 14 பேர் பலி

மாஸ்கோ:  ரஷ்ய கடல் பகுதியில் இரண்டு சரக்கு கப்பல்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில், இந்தியர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.
ரஷ்யா-கிரிமியா இடையே உள்ள கெர்ச் ஜலசந்தி பகுதியில் நேற்று முன்தினம் 2 சரக்கு கப்பல்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த கப்பல்களில் தான்சானியா நாட்டு கொடிகள் பறக்க விடப்பட்டு இருந்தன. கேண்டி என்ற கப்பலில் 9 துருக்கியர்கள், 8 இந்தியர்கள் என 17 ஊழியர்கள் இருந்தனர். மற்றொரு கப்பலான மேஸ்ட்ரோவில் துருக்கியை சேர்ந்த 7 பேர், இந்தியர்கள் 7 பேர், லிபியாவை சேர்ந்த ஒருவர் என 15 பேர் இருந்தனர்.

ஒரு கப்பலில் திரவ இயற்கை எரிவாயு இருந்தது. மற்றொரு கப்பலில் டேங்கர் இருந்தது. ஒரு கப்பலில் இருந்து மற்றொரு கப்பலில் உள்ள டேங்கருக்கு எரிவாயு மாற்றப்பட்டது. அப்போது, எதிர்பாராத விதமாக தீப்பிடித்து இரு கப்பல்களிலும் தீ மளமளவென பரவியது. இந்த விபத்தில் கப்பலில் இருந்த பலர் சிக்கி இறந்தனர். தகவல் அறிந்த ரஷ்ய கடற்படை மீட்பு குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலியானதாக ரஷ்ய கடற்படை ஏஜென்சி தெரிவித்துள்ளது.
மேலும், கப்பலில் இருந்த 20க்கும் மேற்பட்டோர் கடலில் குதித்து உயிர் தப்பியுள்ளனர். இவர்களில் இதுவரை 12 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை. அவர்களின் கதி என்ன என்பது தெரியவில்லை. மோசமான வானிலை காரணமாக மீட்பு பணிகள் தடைபட்டுள்ளது. சம்பவ இடத்தில் கடற்படை மீட்புக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Russian ,Indian , Russian sea area, cargo ships, fire accident
× RELATED ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றிய 10 இளைஞர்கள் நாடு திரும்பினர்