×

ரவுடி கொலையில் 7 பேர் கைது நடுரோட்டில் சரமாரியாக தாக்கி மாமூல் கேட்டதால் கொன்றோம்: பரபரப்பு வாக்குமூலம்

பெரம்பூர்: ரவுடி வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.சென்னை ஓட்டேரி  டோபிகானா பகுதியை சேர்ந்தவர் குமரன் (22), பிரபல ரவுடி. இவர் மீது கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி உள்பட பல வழக்குகள் பல காவல் நிலையங்களில் உள்ளன. இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது.கடந்த ஆண்டு பாரதி இறந்துவிட்டார். இதையடுத்து குழந்தையை, மாமியார் வீட்டில் வளர்த்த குமரன், தாய் வீட்டில் தங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன், மற்றொரு வழக்கில் சிறைக்கு சென்ற குமரன், கடந்த 15 நாட்களுக்கு முன் வெளியே வந்தார்.இதைதொடர்ந்து, கடந்த 20ம் தேதி குமரன், கேஎம் கார்டன் 2வது தெருவில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.புகாரின்படி புளியந்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்ஐக்கள் ஆகாஷ், முபாரக் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில், ஓட்டேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், சந்தேகப்படும்படி சிலர் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று, தீவிரமாக கண்காணித்தனர்.அப்போது சிலர், ஒரு வீட்டில் பதுங்கி இருப்பது தெரிந்தது. உடனே போலீசார், அதிரடியாக அந்த வீட்டில் நுழைந்து, அங்கிருந்த 7 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் இருந்து ஒரு அரிவாள், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், ஓட்டேரியை சேர்ந்த ஐதர் அலி (எ) அப்பு (25), தேவேந்தரின் (24), நரேந்திரன் (25), அருண் (25), சிற்பி (24), சதீஷ் (24), சரத்குமார் (24) என தெரிந்தது. மேலும் விசாரணையில், கொலை செய்யப்பட்ட குமரன், அந்த பகுதியில் தாதாவாக வலம் வந்துள்ளார். மேற்கண்ட நபர்களிடம் அடிக்கடி மாமூல் கேட்டு தொல்லை கொடுப்பார். பணம் தராவிட்டால், அவர்களை நடுரோட்டில் அடிப்பது வழக்கம். இதனால், அவரிடம் அடி வாங்கிய வாலிபர்கள், குமரனை பழிவாங்க முடிவு செய்தனர். இதையொட்டி, சம்பவத்தன்று தனியாக வந்த குமரனை, சுற்றி வளைத்து கொலை செய்தனர் என வாக்குமூலத்தில் தெரியவந்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து போலீசார், கைது செய்யப்பட்ட 7 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளி, அபினேஷ் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rudy , 7 people,arrested , Rudy killing
× RELATED ஸ்ரீபெரும்புதூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடி கொலை