×

மேகதாது அணை பிரச்னையில் அலட்சியத்தின் மொத்த உருவமாக செயல்படும் முதல்வர் - மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: மேகதாது பிரச்னையில் அலட்சியத்தின் மொத்த உருவமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவது தொடர்பான அறிக்கையை தமிழக அரசுக்கு 25.9.2018 அன்று அனுப்பியதாகவும், அதற்கு எவ்வித பதிலும் தமிழக அரசு அளிக்கவில்லை என்றும், கர்நாடக அரசு திடீரென்று ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு எழுதியுள்ளது. அப்போதிலிருந்து அதிமுக அரசு போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் ஒவ்வொரு கட்டத்திலும்  அரசியல் அடிப்படையில் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே மத்திய பாஜ அரசு செயல்பட்டது. இறுதியில் 22.11.2018 அன்று புதிய அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யலாம் என்று அனுமதியையும் கர்நாடக  அரசுக்கு வழங்கி, மத்திய பாஜ அரசு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடித்தது.

கர்நாடகாவில் கிடைக்கும் தேர்தல் ஆதாயத்தை மட்டுமே மனதில் கொண்டு தமிழகத்திற்கு எதிராக ஓரவஞ்சனையுடன் மத்திய பாஜ அரசு செயல்பட்டு வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில்தான், ‘நாங்கள் முன்கூட்டியே அனுப்பிய அறிக்கை மீது தமிழக அரசு எந்தக் கருத்தையும் சொல்லவில்லை’ என்று புதிய காரணம் ஒன்றை தெரிவித்து மேகதாது அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் இப்பொழுது வழங்கியிருக்கிறது கர்நாடக அரசு.

‘எங்கள் கருத்தைக் கேட்காமல் தயாரிக்கப்பட்ட அறிக்கையை எப்படிப் பெற்றுக் கொண்டீர்கள்’ என்று இதுவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கேள்வி கேட்கவில்லை.  மத்திய பாஜ அரசும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்  சேர்ந்து செய்யும் இந்த சதி கூட்டணியில் தமிழக நலன்களும், தமிழக விவசாயிகளும் தமிழகத்தின் காவிரி உரிமைகளும் ‘‘அந்தோ பரிதாபம்’’ என்று நம் கண்ணெதிரில் பறிபோய்க் கொண்டிருக்கிறது.  

 அலட்சியத்தின் மொத்த உருவமாக மேகதாது அணை பிரச்னையில் முதல்வர் செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. ஆகவே மேகதாதுவில் புதிய அணை கட்டும் பிரச்னையில் இனிமேலும் தாமதிக்காமல் ‘தமிழகத்தின் ஒப்புதல் இன்றி அளிக்கப்பட்டுள்ள விரிவான திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்’  என்று மத்திய பாஜ அரசுக்கு அழுத்தம் தர வேண்டும் என்றும், அதே வாதத்தினை  உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முன்வைத்து புதிய மேகதாது அணை கட்டுவதற்கு உடனடியாக தடை பெற வேண்டும் என்றும் முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். ‘சட்ட நடவடிக்கைகள் எடுப்போம்’ என்று தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி கொண்டு, தமிழக விவசாயிகளின் ஒவ்வொரு உரிமையும் பறிபோய் அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதற்கு திரைமறைவில் மத்திய பாஜ அரசுடன் ஒத்துழைக்கும் போக்கினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக கைவிட வேண்டும்.   இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Minister , Megatatha problem, negligence, Stalin condemnation
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...