×

மெகா கூட்டணியில் 9 பிரதமர் வேட்பாளர் - பாஜ தலைவர் அமித் ஷா பேச்சு

மால்டா:  ‘‘பாஜ.வுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணியில் 9 பிரதமர் வேட்பாளர்கள் இருக்கிறார்கள்’’ என கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் நேற்று நடந்த பாஜ பொதுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு மக்களவை தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:ஒரே மேடையில் 20-25 தலைவர்கள் தோன்றினாலும் எந்த பயனும் கிடையாது. பிரதமர் நரேந்திரமோடி மீண்டும் பிரதமராவது உறுதி. மெகா கூட்டணியில் பங்கேற்ற 23 தலைவர்களில் 9 பேர் பிரதமர் வேட்பாளர்கள். ஆனால், எங்களிடம் நரேந்திர மோடி என்ற ஒரே ஒரு பிரதமர் வேட்பாளர்தான் இருக்கிறார்.

குடிமக்கள் மசோதாவை பிரதமர் மோடி தலைமையிலான அரசு சட்டமாக்க உறுதிகொண்டுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதற்கு ஆதரவு தருகிறாரா? அல்லது இல்லையா? மெகா கூட்டணியானது பேராசையால் நிறைந்துள்ளது. அதன் ஒரே குறிக்கோள் மோடியை ஒழிப்பதுதான். ஆனால், நாங்கள் வறுமையையும், ஊழலையும் ஒழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்கள் கையாலாகாத அரசை எதிர்பார்க்கின்றனர். அப்போதுதான், ஊழலில் ஈடுபட முடியும். ஆனால், நாங்கள் வலிமையான அரசை விரும்புகிறோம்.

அப்போதுதான் நம்மால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க முடியும். கையாலாகாத அரசா அல்லது வலிமையான அரசா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மம்தா ஜி, 25 தலைவர்களை ஒரே மேடையில் கொண்டு வந்து நிறுத்தினார். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லை. ஏனெனில், இந்த நாட்டில் உள்ள 100 கோடி மக்கள் பிரதமர் மோடியுடன் இருக்கின்றனர். மெகா கூட்டணி கூட்டத்தில் பாரத மாதாவுக்கு ஜே, வந்தே மாதரம் போன்ற எந்த முழக்கமும் ஒலிக்கப்படவில்லை. மோடி- மோடி என்றுதான் முழக்கமிட்டனர். தனக்கு ஆதரவு அளிக்கும் ஊடுருவல்காரர்களுக்கு மட்டுமே திரிணாமுல் காங்கிரஸ் அரசு பணியாற்றும். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் அரசை அகற்றினால் பசு வதையும், ஊடுருவலும் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Amit Shah ,Prime Ministerial ,coalition ,Mega , Mega coalition, 9 prime ministerial candidates, Amit Shah
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...