×

நலிந்த ஐடிபிஐ கைமாறுகிறது... வங்கியை நடத்தப்போகிறது எல்ஐசி

புதுடெல்லி: கடனை அள்ளிக்கொடுத்து, வராக்கடனில் மூழ்கி தள்ளாடிக்கொண்டிருந்த ஐடிபிஐ வங்கி, இனி எல்ஐசி கையில். ஆம், வங்கி சேவையில் காலடி வைக்கிறது எல்ஐசி. அரசுக்கு சொந்தமான வங்கிகளில் எட்டு வங்கிகள் கடும் வராக்கடன் இழப்பில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் ஐடிபிஐ வங்கி. இந்திய தொழில் வளர்ச்சி வங்கியான இது கடந்த 2005 முதலே பெரும் நிதி இழப்புகளை சந்தித்து வருகிறது. அதிலும், கடந்த எட்டு காலாண்டாக இதன் வருமானம் சிறிது கூட இல்லை. ஒரு பக்கம் பல தொழிலதிபர்களுக்கு கடன்களை அள்ளிக்ெகாடுத்த வங்கி, இன்னொரு பக்கம் கடன் பாக்கியை வசூலிக்க முடியாமல் தள்ளாடியது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு முதல் எல்ஐசி இதன் பங்குகளை வாங்க ஆரம்பித்தது. அரசு தலையிட்டு, வங்கியை அதன் தள்ளாட்டத்தில் இருந்து மீட்க எல்ஐசி மூலம் நடவடிக்கை எடுக்க  முடிவு செய்தது. இதன்படி, வங்கி பங்குகளை வாங்க ஆரம்பித்தது எல்ஐசி. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டில் வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு 44.3 சதவீதமாக உயர்ந்தது. இப்போது 51 சதவீதத்தை எட்டி விட்டது. இதன் மூலம், வங்கியின் நிர்வாகத்தை எல்ஐசி நடத்தும் அளவுக்கு அதிகாரம் படைத்த முதலீட்டாளராக ஆகி விட்டது. இதை ஐடிபிஐ வங்கி உறுதி செய்தது. அந்த வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதமாக எல்ஐசி பங்குகளை வாங்கியதன் மூலம் வங்கியின் நிதி நிலைமை சீராகி வருகிறது. இதனால், வங்கி  அடியோடு மூட வேண்டிய நிலையில் இருந்து மீண்டு விட்டது. நிதி இழப்புகளை சந்தித்த வங்கிகளில் ஒன்றாக ஐடிபிஐ வங்கி இருந்ததால், அதற்கு சில நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்தது. முக்கியமாக கடன் தர முடியாத அளவுக்கு நிலைமை போனது. இந்த தடை இப்போது விலக்கி கொள்ளப்படுகிறது. சில்லரை நிறுவனங்களுக்கு கடனுதவி அளிப்பதில்  எந்த சிக்கலும் இருக்காது. கடன் பட்டுவாடாவில் 50 சதவீதத்தை விரைவில் வங்கி எட்டும்  என்ற நம்பிக்கை உள்ளது  என்று கூறியுள்ளது.


l ஐடிபிஐ வங்கியில் 1.5 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். 18 ஆயிரம் ஊழியர்கள் உள்ளனர். 1800 கிளைகள் ெகாண்டுள்ளது வங்கி.

l அடுத்த 12 மாதங்களில் வங்கியும், எல்ஐசியும் இணைந்து வங்கியை, அதன் சேவைகளை எப்படி  எல்லாம் புதுப்பிப்பது, இன்சூரன்ஸ் சேவைகளுக்கு ஏற்ப விரிவாக்குவது  என்பது பற்றி  முடிவு செய்யும்.

l எல்ஐசி சேவைகள் பலவும் இனி இந்த வங்கி கிளைகள் மூலம் நடக்கும். இதற்கு வங்கி ஊழியர்கள் இனி உதவுவர்.

l எல்ஐசியில் 11 லட்சம் ஏஜன்ட்கள் உள்ளனர். அவர்களுக்கு வங்கி கிளைகள் ஒத்துழைத்து, அவர்கள் சேவையை எளிமைப்படுத்தும்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IDBI ,bank ,LIC , IDBI Bank, LIC, loss of interest
× RELATED ரிசர்வ் வங்கி கட்டுப்பாடுகள் எதிரொலி:...