×

நேப்பியரில் முதல் ஒருநாள் போட்டி இந்தியா-நியூசிலாந்து இன்று பலப்பரீட்சை

நேப்பியர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை  7.30க்கு தொடங்கி நடைபெறுகிறது.கடந்த ஆண்டு நவம்பரில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்  செய்த நிலையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களை தலா 2-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று வரலாற்று சாதனை படைத்தது. இந்த தொடர்கள்  முடிந்ததும் தாயகம் திரும்பாத இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் இருந்து நேரடியாக நியூசிலாந்து சென்றுள்ளது.அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று காலை தொடங்கி  நடைபெறுகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக இருதரப்பு ஒருநாள் தொடரை கைப்பற்றியதால் இந்திய அணி மிகுந்த தன்னம்பிக்கையுடன்  களமிறங்குகிறது. தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த விக்கெட் கீப்பர் டோனி, தொடக்க வீரர் ரோகித் ஷர்மா, கேப்டன் கோஹ்லி ஆகியோர் சிறப்பான பார்மில்  உள்ளதால் ரன் குவிப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவர்களுடன் தவான், கேதார், கார்த்திக், ஜடேஜா என்று பலமான பேட்டிங் வரிசை நியூசி. பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். புவனேஷ்வர்,  ஷமி, கலீக் வேகக் கூட்டணியும், குல்தீப், சாஹல் சுழலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. அதே சமயம் சொந்த மண்ணில்  உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கும் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடைசியாக அங்கு சென்று விளையாடிய தொடரில்  இந்தியா 0-4 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து மண்ணில் விளையாடிய 35 ஒருநாள் போட்டிகளில் இந்தியா 10ல் மட்டுமே வென்றுள்ளது. கடந்த கால மோசமான வரலாற்றை கோஹ்லி  தலைமையிலான இந்திய அணி இம்முறை மாற்றி எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது. நியூசி. கேப்டன் வில்லியம்சன், டெய்லர், லாதம், கப்தில், நிகோல்ஸ்,  கோலின் மன்றோ ஆகியோரின் அதிரடியை கட்டுப்படுத்துவதுடன் போல்ட் - சவுத்தீ வேகத்தை சமாளிப்பதும் இந்திய வீரர்களுக்கு சவாலாக இருக்கும். இரு  அணிகளுமே வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், எம்.எஸ்.டோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், விஜய் ஷங்கர், ஷுப்மான் கில்,  யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார், முகமது சிராஜ், கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், டாம் லாதம், மார்டின் கப்தில், கோலின் டி கிராண்ட்ஹோம், டிரென்ட் போல்ட், ஹென்றி நிகோல்ஸ், டக்  பிரேஸ்வெல், லோக்கி பெர்குசன், மேட் ஹென்றி, கோலின் மன்றோ, ஈஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தீ.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,match ,New Zealand , India's,first,one-day match, New Zealand
× RELATED மைதான் இந்தி விமர்சனம்