×

பிப்ரவரி 3ம் தேதி என அறிவித்த நிலையில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு

வேலூர்: குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து பிப்.3ம்தேதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் போலியோ எனப்படும்  இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது. முதல் தவணையாக  ஜனவரி மாதமும், 2ம் தவணையாக பிப்ரவரி மாதமும் வழங்கப்பட்டு வந்தது. தொடர் நடவடிக்கை காரணமாக போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியாவும் இணைந்துள்ளது.

இருப்பினும் குழந்தைகளுக்கு தொடர்ந்து சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 2019ம் ஆண்டு முதல் இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று மத்திய அரசு  அறிவித்தது. அதன்படி பிப்ரவரி 3ம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பிப்ரவரி 3ம்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்குவதை  தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: போலியோ சொட்டு மருந்து இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, வரும் பிப்ரவரி மாதம் 3ம்தேதி  போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என்று அறிவித்து பணிகள் மேற்கொள்ளபட்டது. ஆனால் நேற்று முன்தினம் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தள்ளி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு திடீரென  உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கான தேதியை மத்திய அரசு அறிவிக்கும். அப்போது, சிறப்பு முகாம்கள் அமைத்து குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படும். இதற்கான  தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் தேதி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : In February, the polio drops
× RELATED மோடி தலைமையில் அமைதியான ஆட்சி பிற...