×

சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சலுகை வழங்கியவர்கள் சட்டம் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்: டிஐஜி ரூபா அதிரடி

பெங்களூரு: கர்நாடக சிறை விதிமுறைகளை மீறி தண்டனை கைதி சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியவர்களுக்கு சட்டத்தின் மூலம் தண்டனை வழங்க வேண்டும் என்று டிஐஜி ரூபா தெரிவித்தார். இதுகுறித்து தினகரனுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான் சிறை அதிகாரியாக இருந்தபோது, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தியபோது, பல முறைகேடுகள் நடந்ததை கைதிகள் தெரிவித்தனர். அவர்கள் சொல்வது உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஓரிரு சம்பவங்களை ஆய்வு செய்தபோது சிறையில் எதுவும் சீராக செயல்படவில்லை என்பது தெரியவந்தது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட கைதிகளான சசிகலா, அப்துல்கரீம் லால் தெல்கி உள்பட சில கைதிகளுக்கு பல்வேறு சலுகைகள் சிறை விதிமுறைகள் மீறி வழங்கியுள்ளது தெரியவந்தது. குறிப்பாக சசிகலாவுக்கு யாருக்கும் வழங்காத தனி சமையல், தனி அறை, பார்வையாளர்களை சந்திக்க இட வசதி, சிறை ஆடை அணிவதில் விலக்கு, சிறை உணவுக்கு பதிலாக தனியாக உணவு சமைத்து சாப்பிட அனுமதி என பல சலுகைகள் வழங்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக சிறைத் துறை டிஜிபியிடம் கடிதம் மூலம் கேட்டபோதும், சரியாக பதில் கிடைக்காததால் சிறையில் நடந்துள்ள முறைகேடுகளை பகிரங்கப்படுத்தினேன். எனது குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்க ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு கடந்த 2017 அக்டோபர் மாதம் விசாரணை அறிக்கையை சிறை துறையிடம் கொடுத்தது. ஆனால் அறிக்கையில் என்னென்ன அம்சங்களை குறிப்பிட்டுள்ளார் என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. வினய்குமார் அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நான் கேட்டபோதும் வெளியிடவில்லை. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்தும் வழங்காமல் காலம் கடத்தப்பட்டது.

சிறை முறைகேடு தொடர்பாக வினய்குமார் குழு கொடுத்துள்ள விசாரணை அறிக்கை ரகசியமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம் கிடையாது. சிறையில் என்ன நடந்துள்ளது என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதில் எந்த தவறும் கிடையாது. வினய்குமார் அறிக்கையை அப்போதே வெளியிட்டிருக்க வேண்டும். அதை வெளியிடாமல் மறைப்பதன் மூலம் சிறை விதிமுறைகளை மீறி குற்றவாளிகளுக்கு சலுகை வழங்கியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கியது போல் உள்ளது. நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவித்தால் மட்டுமே உண்மையான தண்டனையாக இருக்கும். குற்றவாளிகள் சிறையில் சகல வசதிகளுடன் இருந்தால் அதை எப்படி தண்டனையாக கருத முடியும். அதிகாரத்தை யார் தவறாக பயன்படுத்தினாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தானே.

சிறையில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக நான் என்னென்ன குற்றச்சாட்டுகளை முன் வைத்தேனோ அவை அனைத்தும் உண்மை என்பதை வினய்குமார் தலைமையிலான விசாரணை குழு கொடுத்துள்ள விசாரணை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படியானால் கைதிகளுக்கு சலுகை வழங்க காரணமாக இருந்தவர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும். ஆகவே வினய்குமார் அறிக்கை மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கைதிகளுக்கு சலுகை வழங்க பணப் பரிமாற்றம் நடந்தது தொடர்பாக நான் கூறிய குற்றச்சாட்டு குறித்து வினய்குமார் அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றாலும் ஏசிபி விசாரணையில் உள்ளது. அங்கு கண்டிப்பாக உண்மை வெளியாகும்.  இவ்வாறு டி.ஐ.ஜி. ரூபா கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Officers,privilege,sasikala,violating,prison,punished,law,DIG Roopa,Action
× RELATED காந்தி நகரில் போட்டியிடும் அமித்...