×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க வேண்டும்

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது தொடர்பாக பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நேற்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ல் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அந்நிய முதலீடு மேம்பாட்டு வாரியம் அனுமதி அளித்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதையடுத்து இருவர் மீதும் டெல்லி பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை மீதான விசாரணை மட்டும் தற்போது நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, கார்த்தி சிதம்பரம் தனது மகள் படிப்பு சம்பந்தமாக வரும் பிப்ரவரி 21 முதல் 28ம் தேதிவரை வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் இருமுறை அவரது கோரிக்கையை நிராகரித்து விட்டது. இந்நிலையில், மேற்கண்ட மனு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு அவரது தரப்பு வழக்கறிஞர் வலியுறுத்தினார்.

இதையடுத்து தலைமை நீதிபதி உத்தரவில், ஐ.என்.எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கு விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்வது தொடர்பாக அடுத்த ஒரு வாரத்தில் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என தெரிவித்து, வழக்கை வரும் திங்கட்கிழமை அதாவது 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதற்கிடையே ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மீது வழக்கு தொடர மத்திய  அரசிடம்  சிபிஐ அனுமதி கேட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,INX Media Case: The Department of Justice ,departure ,Karthi Chidambaram , INX Media Case, Supreme Court, Enforcement Department
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...