×

உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ இடைக்கால இயக்குனரை நீக்கக்கோரிய வழக்கில் கோகாய் விலகல்: 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

புதுடெல்லி: சிபிஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவை நியமனம் செய்த மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கு விசாரணையில் இருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது. இதையடுத்து சி.பி.ஐ. இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும், அலோக் வர்மா மீண்டும் இயக்குனர் பதவியை தொடரலாம் என்றும் தெரிவித்தது.  இதையடுத்து அலோக் வர்மா மீண்டும் பதவி ஏற்றநிலையில், அவரை பதவி நீக்கம் செய்வதாக உயர்நிலை குழு அறிவித்தது. இதைத்தொடர்ந்து சி.பி.ஐ இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் கடந்த 11ம் தேதி மீண்டும் பொறுப்பேற்றார். அதேப்போல் அலோக் வர்மா தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல் படை இயக்குனராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்து அவர் ராஜினாமா செய்தார்.

இந்த நிலையில் சி.பி.ஐ. இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் நியமனத்துக்கு எதிராக காமன்காஸ் தன்னார்வ அமைப்பு சார்பாக மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூசண் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், “டெல்லி சிறப்பு காவல் துறை சட்டத்தின்படி நிரந்தர சி.பி.ஐ. இயக்குனரை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். நாகேஸ்வர ராவை இடைக்கால இயக்குனராக நியமித்தது செல்லாது. அதனால் மத்திய அரசின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ எனக்கூறி குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றது. இந்த நிலையில் வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

தலைமை நீதிபதி உத்தரவில், “சிபிஐ புதிய இயக்குனரை தேர்வு செய்யும் பிரதமர் தலைமையிலான உயர்நிலை தேர்வுக்குழு கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது. அதில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்ற முறையில் நானும் கலந்துக் கொள்கிறேன். இத்தகைய சூழலில் இந்த வழக்கை நான் விசாரிப்பது சரியாக இருக்காது. அதனால் நான் இதிலிருந்து விலகிக் கொள்கிறேன். மேலும் மனுவை 2வது நீதிமன்றத்தில் பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தப்படும்’’ என தெரிவித்து வழக்கை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SC ,CBI ,Supreme Court , Supreme Court, CBI's interim director, Gokai
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...