×

தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசு, மாநில தேர்தல் ஆணையம் 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்ற மனுவிற்கு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் அடுத்த 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர், நகராட்சித் தலைவர் உள்ளிட்ட 1 லட்சத்து 30ஆயிரம் பதவியிடங்கள் காலியாக இருக்கின்றன. இந்த பதவிகளுக்காக கடந்த 2016 அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி தற்போது வரை மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை தொடர்ந்து ஒத்திவைத்து வருகிறது.

இதில் தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தரப்பில் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு மட்டும் உச்ச நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜெய் சுகின் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்தார். அதில், “உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிந்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி பணிகள் முற்றிலுமாக தடைபட்டுள்ளது. மக்களுக்கு கிடைக்க வேண்டிய பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே, மாநில மக்களின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை தமிழகத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இதை தவிர தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை செய்வது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதையும் ஒரு காரணமாக கூறி வருகின்றனர். இதில் கடந்த 2017 அக்டோபர் மாதம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் 2018 ஜனவரி மாதம் தொகுதி வரையறை செய்யும் பணிகள் நிறைவடையும் எனவும், அதனடிப்படையில் உடனடியாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் எனவும் கூறியிருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை மாநில தேர்தல் ஆணையம் இதுவரை நிறைவேற்றவில்லை.

எனவே, தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்லை உடனடியாக நடத்த ஆணை பிறப்பிக்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கு விவகாரத்தில் தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் அதுகுறித்த அனைத்து விளக்கங்களும் அடங்கிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என நோட்டீஸ் அனுப்பி கடந்த அக்டோபர் 25ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் நீதிபதி அனில் லட்சுமன் பன்சாரே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் வினோத் கண்ணா மற்றும் மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் வழக்கறிஞர் நேரில் ஆஜராகி நீதிபதி முன்னிலையில் ஒரு கோரிக்கை வைத்தனர். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பான விவகாரத்தில் மனுதாரருக்கு பதில் மனு தாக்கல் செய்ய மேலும் 4 வாரம் கூடுதல் அவகாசம் வேண்டும்’’ என தெரிவித்தனர். இதற்கு மனுதாரரான வழக்கறிஞர் ஜெய்சுகின் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதி உத்தரவில், “தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவிற்கு தமிழக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் ஆகியோர் அடுத்த 4 வாரத்தில் கண்டிப்பாக பதிலளிக்க வேண்டும். மேலும் அதையடுத்து மேற்கண்ட மனு வழக்கமாக விசாரணை பட்டியலில் வரவைத்து நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படும்’’ என நேற்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : State ,Election Commission ,elections ,Supreme Court Action Action , Tamil Nadu Local Election, Government, State Election Commission, Supreme Court
× RELATED தேர்தல் வன்முறையை தவிர்க்க...