×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா? உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை, கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உட்பட அடுத்தடுத்து மொத்தம் 5 பேர் இறந்தனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் விபத்து என கூறப்பட்டாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா பத்திரிக்கையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார். இதேபோல் வழக்கில் 2வது குற்றவாளியான சயன் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்தனர். இதையடுத்து கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும் தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி பத்திரிக்கையாளர் மேத்யூஸ் மற்றும் சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை குற்றவியல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் இருவரையும் எழும்பூர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இந்த நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக டிராபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “மேற்கண்ட வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தலையீடு இல்லையென்றால் எதற்காக அவசர, அவசரமாக வழக்கு போட்டு ஜாமீனில் இருந்த சயன் மற்றும் மனோஜை தனிப்படை அமைத்து கைது செய்ய வேண்டும்? இந்த வழக்கை தமிழக போலீசார் விசாரிக்கக் கூடாது.

ஏனெனில் காவல் துறை மற்றும் உள்துறை ஆகியவை முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் இருப்பதால் அவர் சாட்சியங்களை கலைத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட வாய்ப்புள்ளது. அதனால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி அமைத்து விசாரணை நடத்திட நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா என்பது குறித்து இன்றைய விசாரணையில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Kodanad ,investigation ,CBI ,Supreme Court , Will Kodanad murder, robbery case be transferred to CBI investigation? The Supreme Court is investigating today
× RELATED நீலகிரி வனப்பகுதியில் துப்பாக்கி...