×

குவிந்து கிடக்கும் வருமான வரி வழக்குகள் வாபஸ் பெற இந்த மாத இறுதி வரை கெடு

புதுடெல்லி: நிலுவையில் உள்ள வருமான வரி வழக்குகளை வாபஸ்பெற இந்த மாத இறுதி வரை கெடு விதித்து மத்திய நேரடி வரிகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  வரி ஏய்ப்பு உள்ளிட்டவற்றை கண்டறியும் வருமான வரித்துறை, சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இவற்றில் பல மேல் முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பாயங்கள் மற்றும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. உயர் நீதிமன்றங்களில் போடப்பட்ட 8,300 மேல் முறையீடு வழக்குகளில் 23 சதவீதம் வழக்குகளும், வருமான வரி தீர்ப்பாயங்களில் போடப்பட்ட 7,785 மேல் முறையீடுகளில் 22.8 சதவீதம் வழக்குகளும் தீர்வு காணப்படாமல் நிலுவையில் கிடக்கின்றன.

வருமான வரி வழக்கு எண்ணிக்கைகளை குறைக்கும் வகையில், மத்திய அரசு மேல் முறையீட்டுக்கான வழக்கு மதிப்பின் வரம்பை உயர்த்தியுள்ளது. இதன்படி வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சுங்கம், கலால் மற்றும் சேவை வரி மேல் முறையீட்டு தீர்ப்பாயங்களில் குறைந்தது 10 லட்சம் மதிப்பிலான வழக்குகள் மட்டுமே மேல் முறையீட்டுக்கு அனுமதிக்கப்பட்டன. இது 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் உயர் நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்வதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 50 லட்சமாகவும், உச்ச நீதிமன்றங்களில் மேல் முறையீடு செய்ய வரம்பு 25 லட்சத்தில் இருந்து 1 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக 41 சதவீத வழக்குகள் குறைக்கப்பட்டுள்ளன. இதுபோல் நிலுவையில் உள்ள மேற்கண்ட வழக்குகளை வாபஸ்பெற இந்த மாத இறுதி வரை கெடுவிதித்து மத்திய நேரடி வரிகள் ஆணைய உறுப்பினர் நீனா குமார் வருமான வரித்துறை முதன்மை ஆணையர்களுக்கு கடந்த வாரம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக தீர்ப்பாயம் மற்றும் நீதிமன்றங்களில் உள்ள மூத்த அதிகாரிகளுன் சிறப்பு கூட்டங்கள் நடத்தி விரைவு படுத்த கேட்டுக்கொண்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Income tax cases, withdraw
× RELATED ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; இன்று...