×

100க்கு கீழ் உள்ள கரன்சி மட்டும் பயன்படுத்த அனுமதி 2,000, 500, 200 நோட்டுக்கு நேபாளத்தில் தடை: நேபாள மத்திய வங்கி அறிவிப்பு

காத்மாண்டு: பண மதிப்பு நீக்கத்துக்கு பிறகு அறிமுகம் செய்த 2,000, 500, 200 நோட்டுக்கு நேபாளத்தில் தடை விதித்து நேபாள மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 100 மற்றும் அதற்கு கீழ் மதிப்பிலான இந்திய கரன்சிகளை மட்டுமே அங்கு பயன்படுத்த முடியும். கருப்பு பணத்தை மீட்கும் வகையில் பழைய 500, 1,000 நோட்டு செல்லாது என, 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதை தொடர்ந்து புதிய 2,000, 200, 500 நோட்டு வெளியிடப்பட்டன. இந்திய கரன்சிகள் நேபாளத்திலும் புழக்கத்தில் உள்ளன. இந்நிலையில், நேபாள மத்திய வங்கியான, நேபாள ராஷ்டிரா வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்ைகயில் கூறியிருப்பதாவது:

இந்திய கரன்சியான 2,000, 500, 200 நோட்டுக்களை நேபாளத்தில் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. இவற்றை புழக்கத்தில் பயன்படுத்தவோ, வைத்திருக்கவோ கூடாது. அதாவது இந்திய 100 கரன்சிக்கு மேல் மதிப்புடைய நோட்டு தடை செய்யப்படுகிறது. இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டுக்கு செல்லும் நேபாள மக்களும் மேற்கண்ட கரன்சிகளை எடுத்துச்செல்லக் கூடாது. அதுபோல், நேபாள மக்கள் யாரும் பிற நாடுகளில் இருந்து நேபாளத்துக்கு மேற்கண்ட கரன்சிகளை எடுத்து வரக்கூடாது. 100 மற்றும் அதற்கு கீழ் மதிப்புடைய இந்திய கரன்சிகளை மட்டும் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளது.

100க்கு மேல் உள்ள இந்திய கரன்சிகளை நேபாள மக்கள் பயன்படுத்த தடை விதிப்பது தொடர்பாக அரசிதழில் வெளியிட நேபாள அமைச்சரவை கடந்த மாதம் 13ம் தேதி முடிவு செய்தது. இந்நிலையில் இதுதொடர்பான அறிவிப்பை நேபாள மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இந்தியாவில் இருந்து நேபாளத்துக்கு 12 லட்சம் இந்தியர்கள் தரைவழி மார்க்கமாக வந்து செல்கின்றனர். 1,60,132 பேர் விமானங்கள் மூலம் வருகின்றனர். நேபாளம் செல்லும் இந்தியர்கள் அங்கு சராசரியாக 5.8 நாட்கள் தங்குகின்றனர். ஒவ்வொருவரும் சராசரியாக 11,310 செலவிடுகின்றனர். இந்த சூழ்நிலையில், மேற்கண்ட தடை சுற்றுலா பயணிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அவர்கள் யூரோ மற்றும் டாலராக மாற்ற நடைமுறை சிரமங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Central Bank ,Nepalese , Nepal, Nepal Central Bank
× RELATED கோவாவில் தங்கியிருந்த நேபாள மேயரின் மகள் மாயம்