×

பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

டெல்லி: பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். கர்நாடக மாநிலம், துமக்கூரு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சித்தகங்கா மடத்தின் ஜீயராகவும், லிங்காயத் சமுதாயத்தின் ஆன்மிக தவைராகவும் ஸ்ரீசிவகுமார  சுவாமி திகழ்ந்துள்ளார். மத்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் பட்டத்துடன் ‘நடமாடும் தெய்வம்’ என அவரது பக்தர்களால் அழைக்கப்படும் சிவகுமார  சுவாமியின் தன்னலமற்ற தொண்டினை சிறப்பிக்குமாறு அவருக்கு நாட்டின் மிக உயரிய ‘பாரத ரத்னா’ விருது அளிக்கப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா பரிந்துரைத்திருந்தார்.

சிறுநீரகம் சார்ந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஸ்ரீசிவகுமார சுவாமிஜி கடந்த ஆண்டு பெங்களூரு நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று மடத்துக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்றிரவு வயோதிகம்சார்ந்த பிரச்சனைகளால் அவரது உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு  ஏற்பட்டது. மருத்துவக் குழுவினர் அவரை கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி இன்று காலை 11.40  மணியளவில் தனது 111-வது வயதில் காலமானார். சிவக்குமாரசாமி மரணம் தொடர்பான தகவல் வெளியானதும் சித்தகங்கா மடத்துக்கு சென்று கர்நாடக  முதல்வர் குமாரசாமி அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர்கள் சதானந்தா கவுடா, எடியூரப்பா உள்ளிட்ட அரசியர் தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏராளமான சமூக பணிகளை செயல்படுத்தி வந்தவர் சிவக்குமாரசாமி என்றும் பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். ஸ்ரீசிவக்குமாரசாமியுடன் எடுத்த புகைப்படத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மடாதிபதி ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் மறைவுக்கு கர்நாடக மாநில அரசின் சார்பில் மூன்றுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மாநில முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். நாளை மாலை 4.30 மணியளவில் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜியின் இறுதிச்சடங்கு  நடைபெறவுள்ள நிலையில், இறுதிச்சடங்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதை தொடர்ந்து, தும்கூருக்கு வரும் முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர். அப்பகுதியில் பத்துக்கும் அதிகமான தற்காலிக ஹெலிப்பேடுகள் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : President ,funeral ,Sri Sivakumar Swamiji ,Sivaganga Madipathy , Bangalore Siddhaganga Madathipathy, Sri Sivakumar Swamiji, funeral, president, prime minister
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...