ராகுல் காந்தி பிரதமரானால் புதுவைக்கு மாநில அந்தஸ்து: முதல்வர் நாராயணசாமி உறுதி

புதுச்சேரி: ராகுல்காந்தி பிரதமரானால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.காங்கிரஸ் கட்சியில் தொண்டர்களின் கருத்துகளை கட்சி தலைமைக்கு தெரிவிக்கும் வகையில் சக்தி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சக்தி திட்டம் துவக்க விழா கம்பன் கலையரங்கில் நடந்தது. மாநில தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் வரவேற்றார்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், முதல்வர் நாராயணசாமி ஆகியோர் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்தனர். சக்தி திட்டத்தின் அகில இந்திய தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், புதுச்சேரி மாநில பொறுப்பாளருமான சஞ்சய் தத் ஆகியோர் சக்தி திட்டம் குறித்து விளக்கி பேசினர்.

இவ்விழாவில் முதல்வர் நாராயணசாமி பேசுகையில், காங்கிரஸ் தொண்டர்களுக்கு ஒரு ஏக்கம் இருந்தது. தலைவர் ராகுல் காந்தியை பார்க்க வேண்டும். அவரிடம் தங்களது கருத்துகளை கூறவேண்டும் என்ற ஏக்கம் இருந்து வருகிறது. இந்த ஏக்கத்தை சக்தி திட்டம் பூர்த்தி செய்யும். ராகுல் தெளிவான திட்டத்தோடு செயல்படுகிறார். பாராளுமன்றத்தில் ரபேல் ஊழல் குறித்து பிரதமரிடம் ராகுல் கேள்வி கேட்டபோது, அவரால் பதில் கூற முடியவில்லை. ராகுலை நேருக்குநேர் கூட பார்க்க முடியவில்லை. தற்போது அனைத்து கட்சியினரும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என முனைப்பு காட்டி வருகின்றனர். அது நடக்கும். ராகுல் காந்தி பிரதமராவர். ராகுல் காந்தி பிரதமரான 6 மாதத்தில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும்.

இந்தியாவுக்கு மோடி இருப்பதுபோல் புதுச்சேரிக்கு கிரண்பேடி இருக்கிறார். மக்கள் நலத்திட்டங்களை தடுக்க யாருக்கும் அதிகாரம் கிடையாது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற மோடியின் திட்டத்தை கவர்னர் கிரண்பேடி புதுச்சேரியில் செயல்படுத்த முனைகிறார். எல்லாம் 4 மாதத்தில் முடிவுக்கு வந்துவிடும். புதுவைக்கு விடிவு காலம் பிறக்கும் என்றார்.சக்தி திட்டம் துவக்க விழாவில் முகுல் வாஸ்னிக் பேசும்போது, மத்திய அரசு புதுச்சேரி அரசை செயல்படவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்கிறது. மோடி தலைமையிலான மத்திய பாஜ ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அனைவரும் சேர்ந்து ராகுலை பிரதமராக்கி நாட்டில் வளர்ச்சியை கொண்டு வரவேண்டும். மற்ற மாநிலங்களில் இல்லாத வகையில் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி மேலும் வளர சக்தி திட்டம் உதவும் என்றார்.

சஞ்சய் தத் பேசும்போது, புதுச்சேரியில் தொடங்கப்படும் சக்தி திட்டத்தின் மூலம் மாநிலத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் ஒருங்கிணைக்கப்படுவார்கள். பணபலத்தை வைத்து காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க நினைத்தவர் மோடி. புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் நிற்கும் வேட்பாளரை வெற்றிபெற செய்ய அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: