வடலூரில் 148 வது தைப்பூச திருவிழா: ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம்...பல ஆயிரம் பக்தர்கள் வழிபாடு

குறிஞ்சிப்பாடி: வடலூரில் 148 தைப்பூச ேஜாதி திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. இதில் பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து நாளை காலை வரை ஜோதி தரிசனம் நடைபெறுகிறது.கடலூர் மாவட்டம் வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபை உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தன்று ஜோதி தரிசனம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு 148 வது ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. அதன்படி நேற்று அதிகாலை 5 மணிக்கு அகவல் பாராயணமும், தொடர்ந்து தண்ணீரில் விளக்கேற்றிய கருங்குழி ஞானசபை ஆகிய இடங்களில் சன்மார்க்க கொடியும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து மாலையில் தர்மசாலைமேடை, ஞானசபை மேடைகளில் கருத்தரங்குகள், சன்மார்க்க சொற்பொழிவுகள், நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச ஜோதி தரிசனம் சத்தியஞானசபையில் இன்று காலை 6 மணி அளவில் தொடங்கியது. இதில் ஏழுதிரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.இதில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி. சம்பத், ஞானாலயா சுவாமிகள், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜேந்திரன், பத்மேந்திரா சுவாமிகள் உள்ளிட்ட பல ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர். தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணிக்கும் ஜோதிதரிசனம் நடைபெற்றது. இன்று இரவு 7 மணி, 10 மணி மற்றும் நாளை (22ம்தேதி) அதிகாலை 5.30 மணி என ஆறு காலங்கள், ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது. 23ம் தேதி மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் வள்ளலார் பயன்படுத்திய பேழையை வைத்து, பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை திருவறை தரிசனம் நடைபெறவுள்ளது.

ஜோதி தரிசன விழாவுக்கு வரும் சன்மார்க பக்தர்கள் வசதிக்காக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் சத்தியஞான சபை வளாகத்தில் புறக்காவல் நிலையம், அவசர ஊர்தி வசதியுடன் மருத்துவக்குழு, தீயணைப்பு வீரர்கள் என பல்வேறு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் பாதுகாப்புக்காக 12 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 52 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வடலூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, முக்கிய வீதிகளில் மின் விளக்கு வசதிகள், 80 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடலூர்: இதேபோல் கடலூர் வண்டிப்பாளையம் சுப்பிரமணியர் கோயில், புருகிஸ்பேட்டை முருகன்கோயில், விலங்கல்பட்டு முருகன் கோயில், ஆனைக்குப்பம் பாலமுருகன் கோயில் மற்றும்பாடலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் சன்னதி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் இன்று காலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம், வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏழு திரைகள் அர்த்தம்

* கருப்புத்திரை இறையை மறைக்கிறது

* நீலத்திரை உயிராகிய ஆன்மாவை மறைக்கிறது

* பச்சைத்திரை பரவெளியை மறைக்கிறது

* சிவப்புத்திரை சிதாகாசவெளியை மறைக்கிறது

* பொன்மைத்திரை பரம்பொருள் உள்ள வெளியை மறைக்கிறது

* வெண்மைத்திரை பொய்ப்பதியை மறைக்கிறது

* கலப்புத்திரை இந்திரிய கரண அனுபவங்களை மறைக்கிறது

152 ஆண்டுகளாக அணையாத அடுப்பு:

ஏழை மக்களின் பசியை, ஒரு பிணி (நோய்) என்று சொன்னவர் வள்ளலார். ஜாதி, மதங்கள் தலைவிரித்தாடிய 1867-ம் ஆண்டு அது. ஜாதி, மத பேதம் மற்றும் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவரின் பசியையும் போக்க முடிவெடுத்தார் வள்ளலார். அதற்காக, சத்திய தர்மச்சாலையை வடலூரில் நிறுவினார். அப்போது, அவர் கையால் மூட்டப்பட்டதுதான் ‘அணையா அடுப்பு’.1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். இன்று வரை அந்த அணையா நெருப்பு பலரின் பசியைப் போக்கிக்கொண்டிருக்கிறது. இயற்கைச் சீற்றங்கள் கடலூர் மாவட்டத்தைப் பல முறை புரட்டிப் போட்டிருக்கிறது. ஒரு நாளும் இந்த நெருப்பு அணைந்தது இல்லை. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு, ஒவ்வொரு வேளைக்கும் நூற்றுக்கணக்கானோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கான அரிசியும், மற்ற பொருட்களும் ஒரு நாளும் பணம் கொடுத்து வாங்கியது இல்லை. எல்லாமே பொதுமக்களின் காணிக்கைதான்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: