×

பழனியில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

பழநி: பழநி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தைப்பூச தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்துள்ளனர். காவடி எடுத்து ஆடியும், அலகு குத்தியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் நேர்த்திக் கடன் செலுத்தினர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடு பழநி. இங்குள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். இத்திருவிழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து, பாதயாத்திரையாக பழநி கோயிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

இந்தாண்டு பழநி கோயில் தைப்பூச திருவிழா கடந்த 15ம் தேதி பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் சுவாமி தினமும் காலையில் தந்தப் பல்லக்கிலும், இரவில் ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணம் நேற்று இரவு 7.30 மணிக்கு நடந்தது. சிம்ம லக்கினத்தில் வள்ளி - தெய்வானை சமேதர முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடந்தது. இரவு 9.30 மணிக்கு சுவாமி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் ரத வீதிகளில் உலா வந்தார்.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் தற்போது நடக்கிறது. தேரோட்டத்தை காண நேற்று காலை முதலே பழநியில் பக்தர்கள் குவியத் துவங்கினர். அவர்களது அரோகரா கோஷங்கள் விண்ணை முட்டுகின்றன. பக்தர்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், பறவைக்காவடி எடுத்தும் தங்களது வேண்டுதல் நிறைவேற நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களின் காவடியாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், தேவராட்டம் போன்றவை காண்போரை பரவசமடைய செய்தது. வின்ச் நிலையம் மற்றும் ரோப் கார் நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்றனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : pilgrims , Palani Murugan Temple, Thaipoosath Festival
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்