புத்துயிர் பெறும் ஓலைப்பெட்டி தொழில் : பிளாஸ்டிக் தடையால் பாரம்பரியத்துக்கு மவுசு

காரியாபட்டி: தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் முன்பு பனைமரங்கள் அதிகமாக இருந்தன. இப்பகுதிகளில் பனை ஓலைகள் மூலம் பெட்டி, கூடை, கொட்டான், அஞ்சறைப் பெட்டி, மிட்டாய் பெட்டி, விசிறி, முறம் என விதவிதமான கைவினைப் பொருட்களை செய்து வந்தனர். இந்த தொழில் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்தன. நாளடைவில் பிளாஸ்டிக் பொருட்களின் வருகையால் ஓலைப்பெட்டிகளின் மவுசு பயன்பாடு படிப்படியாக குறைந்தது. இதனால், பல குடும்பத்தினர் இந்த தொழிலை விட்டு மாற்றுத் தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி பகுதியில் சின்ன காரியாபட்டி மற்றும் பாப்பணம், குரண்டி, சிவலிங்கபுரம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் பனை ஓலைப்பெட்டி தயாரிக்கும் தொழில் நடந்து வருகிறது. காரியாபட்டி ஜெகஜீவன்ராம் தெருவில் முன்பு 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நார் மற்றும் ஓலைப்பெட்டிகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். தற்போது ஒரு சில குடும்பத்தினர் மட்டுமே இந்த தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் பனை ஓலை பெட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. சந்தைகளில் தேவை அதிகம் இருந்தும், பெட்டிகளை செய்ய போதிய தொழிலாளர்கள் இல்லை. இளைய தலைமுறையினர் தொழிலை கற்க ஆர்வம் காட்டவில்லை. இந்த தொழிலை காக்கவோ, வளர்க்கவோ தமிழக அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஓலைப்பெட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘காரியாபட்டி பகுதி பனை ஓலைப்பெட்டி தயாரிப்புக்கு பெயர் பெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன் ராமநாதபுரத்தில் இருந்து  வந்து கற்றுக்கொடுத்தனர். வீடு தவறாமல் ஓலைப்பெட்டி, நார் பெட்டி தயாரிக்கும் தொழிலை செய்து வந்தோம். ராமநாதபுரம், தேனியில் இருந்து வந்து மொத்தமாக வாங்கிச் செல்வர். பிளாஸ்டிக் வருகையால் தொழில் முடங்கியது. 50 குடும்பங்கள் பார்த்த தொழிலை தற்போது இரண்டு, மூன்று குடும்பங்கள்தான் செய்கிறோம். பனை ஓலைகள் மற்றும் ஓலை  மட்டைகளை விலைக்கு வாங்கிப் பெட்டி, புடைப்பான் உள்ளிட்ட பல பொருட்களை செய்து வருகிறோம்.  மதுரை பூ மார்கெட்டுக்கு நார், ஓலைப்பெட்டிகளை அனுப்புகிறோம். மழை இல்லாமல் பனை மரங்களும் பட்டுப் போய் வருகின்றன. எங்கள் தலைமுறையோடு இந்த தொழில் அழியும் அபாயம் உள்ளது. தொழிலை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

பிரசாதம் முதல் பார்சல் வரை....

திருமணம், கோயில் திருவிழாக்களுக்கு பொருட்களை எடுத்துச் செல்ல முன்பு நார் மற்றும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்தினர். இந்த பெட்டிகளில் வைக்கப்படும் உணவு மற்றும் தானியங்கள் கெடாமல் இருக்கும். காடு, வயல்களில் விதை விதைக்கவும், மணப்பெண்ணுக்கு சீர்வரிசை, கோயில் பிரசாதம் வழங்கவும் ஓலைப்பெட்டிகளை பயன்படுத்தியுள்ளனர். கடல் மீன்கள், கருப்பட்டிகளை பார்சல் செய்யவும் ஓலைப் பெட்டிகளை பயன்படுத்தியுள்ளனர்.

40 சதவீதம் லாபம்

ஓலைப்பெட்டிகளின் அளவைப் பொறுத்து, ரூ.65 முதல் ரூ.150 வரை விலை வைத்து விற்பனை செய்கின்றனர். செலவு போக 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை லாபம் கிடைக்கும் என்கின்றனர். இதேபோல, புடைப்பான்கள் ரூ.50 முதல் ரூ.150 வரை விலை போகின்றன. வண்ண நார்களில் முடையப்படும் புடைப்பான்களை அதிக விலைக்கு விற்கின்றனர். ஒரு தொழிலாளர் ஒரு நாளைக்கு 5 முதல் 6 பெட்டி வரை செய்ய முடியுமாம். தூத்துக்குடி, பந்தல்குடி, ராமநாதபுரம் பகுதிகளுக்குச் சென்று பனையோலைகளை வாங்கி வருவதால், போக்குவரத்து செலவும் அதிகமாக இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: