ஜிஎஸ்டியில் தொடர்ந்து 6 மாதங்களுக்கு கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் இ-வே பில் உருவாக்க முடியாது: வருது அதிரடி திட்டம்

புதுடெல்லி: தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால், சரக்குகளை அனுப்புவதற்கு இ-வே பில் உருவாக்குவதை தடை செய்யும் நடைமுறையை விரைவில்  அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.₹50,000க்கு மேல் மதிப்பு உள்ள சரக்குகளை அனுப்ப இ-வே பில் கட்டாயமாக உள்ளது. இதுபோல் ஜிஎஸ்டி விதிகளின்படி வர்த்தகர்கள் கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், போலி பில் உட்பட பல்வேறு வகையில் ஜிஎஸ்டி மோசடிகள் பெருகி வருகின்றன. நடப்பு நிதியாண்டில் கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் ஜிஎஸ்டி விதிமீறல்  தொடர்பாக 3,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் சுமார் ₹15,278.18 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளது.  ஜிஎஸ்டி ஏய்ப்பு, முறைகேடுகளை தடுக்கும் ஒரு நடவடிக்கையாக உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் சரக்குகளை அனுப்பும்போது இ-வே பில் கட்டாய அமலில் உள்ளது. ₹50,000க்கு மேல்  சரக்கு கொண்டு செல்பவர்கள், வாகன சோதனையின்போது ஜிஎஸ்டி அதிகாரிகளிடம் இ-வே பில் சமர்ப்பிக்க வேண்டும். அதிகாரிகள் சோதனையில், சிலர் ஒரே இ-வே பில்லை வைத்து பல முறை சரக்குகளை கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இ-வே பில்லுடன் பாஸ்ட்டேக் இணைக்கப்படுவதன் மூலம்  வாகனம் எங்கிரந்து எங்கு என்றுள்ளது. மீண்டும் அதே இ-வே பில்லை பயன்படுத்தி சரக்குகளை கொண்டு செல்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது.

 ஏற்கெனவே போலி பில்கள் மூலம் ஜிஎஸ்டி ஏய்ப்பு நடந்து கொண்டிருக்க, இ-வே பில் முறைகேடு காரணமாகவும் ஜிஎஸ்டி வருவாய் கணிசமான அளவுக்கு குறைந்து வருவதை அதிகாரிகள் கண்டு  பிடித்துள்ளனர். ஜிஎஸ்டி வருவாயாக மாதம் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஈட்ட பட்ஜெட்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் நடப்பு நிதியாண்டில் சுமார்  ₹96,800 கோடியாக உள்ளது. எனவே, ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாமல் முறைகேடு செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க புதிய திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது.இதன்படி, தொடர்ந்து 6 மாதங்களுக்கு ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள்,  இ-வே பில் உருவாக்க தடை செய்யப்படுவார்கள். இதன்மூலம் சரக்குகளை அவர்கள்அனுப்ப முடியாது. இது  முறைகேடுகளை தடுக்க உதவும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மத்திய அரசு இதனை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

* மத்திய அரசுக்கு ஜிஎஸ்டி வருவாய் எதிர்பார்த்த அளவு கிடைக்கவில்லை. முறைகேடுகளால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது.

* போலி பில் உட்பட, நடப்பு நிதியாண்டில் சுமார் ₹15,278.18 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்பு தொடர்பாக 3,626 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

* ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் உருவாக்குவதை தடை செய்வதன் மூலம் முறைகேடுகள் குறைந்து வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: