எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு மக்களவை தேர்தலில் தோல்வி காத்திருக்கிறது: பிரதமர் மோடி பேச்சு

மட்கான்: ‘‘மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணிக்கு தோல்வி காத்திருக்கிறது’’ என பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்களவை தேர்தலுக்கான மெகா கூட்டணி அமைக்கும் எதிர்க்கட்சிகள், மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று முன்தினம் பிரமாண்ட பேரணி நடத்தின. இதற்கு, திரிணாமுல்  காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். இதில், 22 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர். இவர்கள், அடுத்த தேர்தலில் பாஜ.வை  தோற்கடிக்க வேண்டும் என சபதம் எடுத்தனர். பல தலைவர்கள் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் மீது குறை கூறினர். மீண்டும் வாக்குச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என அவர்கள்  வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், கோவாவைச் சேர்ந்த வாக்குச்சாவடி அளவிலான பாஜ தொண்டர்கள் இடையே காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி நேற்று பேசுகையில்,  ‘‘மக்களவை  தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி, தோல்வியை எதிர்நோக்கி உள்ளது. அவர்களுக்கு தோல்வி காத்திருக்கிறது. இந்த தோல்விக்கான காரணத்தை கூற எலக்ட்ரானிக்  ஓட்டு இயந்திரம் மீது குறை கூறி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி ஊழல் நிறைந்தது, எதிர்மறையானது மற்றும் நிலையற்றது. எதிர்க்கட்சிகளிடம் பண பலம் உள்ளது.  நம்மிடம் மக்கள் பலம் உள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணி, அரசியல்  கட்சிகளின் கூட்டணி. நாம், 125 கோடி இந்தியர்களின் நம்பிக்கை, கனவு மற்றும்  ஆசைகளுடன் கூட்டணி  வைத்துள்ளோம். பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு மத்திய அரசு  10 சதவீத இட ஒதுக்கீடு அளித்தது எதிர்க்கட்சிகளை தூக்கம் இல்லாமல் செய்து விட்டது’’ என்றார்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜ தொண்டர்களிடம் இதேபோல் பேசிய மோடி, ‘‘முந்தைய அரசுகள், ஊழலுக்காக தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தன. தற்போது ஊழல் பற்றிய விவாதம்  இல்லை, புதிய திட்டங்கள் பற்றிதான் பேசப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு முன் ஊழல், மின் பற்றாக்குறை, நிதி பிரச்னைகளுடன் இந்தியாவை உலகம் பார்த்தது. தற்போது நம்பிக்கையுடன்  பார்க்கிறது. மாவோயிஸ்ட் வன்முறை ஒடுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் போதிய கழிவறைகள் இல்லை என கூறப்பட்டது. இப்போது 9 கோடி கழிவறைகள்  கட்டப்பட்டுள்ளன. ஒரு காலத்தில் வளர்ச்சி குறைந்து, பண வீக்கம் அதிகரித்தது. தற்போது வளர்ச்சி பெருகி பணவீக்கம் குறைந்துள்ளது. இந்த மாற்றங்கள் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்து  வந்துள்ளன’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: