தொழில்துறை உள்கட்டமைப்பு திட்ட விழா மேடையில் மத்திய அமைச்சர் பேச்சில் குறுக்கிட்டு தமிழக அமைச்சர், எம்பி பதிலடி

திருச்சி: திருச்சியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் பேச்சுக்கு தமிழக அமைச்சர், எம்பி ஆகிேயார் குறுக்கிட்டு பதிலடி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு உற்பத்தி துறை சார்பில், பாதுகாப்பு தொழில்துறை உள்கட்டமைப்பு திட்டங்களின் துவக்க விழா திருச்சியில் நேற்று நடந்தது.இதில் திருச்சி எம்.பி., குமார்  பேசுகையில், ‘திருச்சி விமான நிலையம் விரிவாக்க பணிகளுக்கு ராணுவத்துக்கு சொந்தமான இடத்தை வழங்க கோரியும் இதுவரை கிடைக்கவில்லை. நான் என்னை துரதிர்ஷ்டவசமான எம்.பி  என்பேன். ஏனெனில் 10 ஆண்டாக நான் எம்.பியாக இருந்தும் இக்கோரிக்கை நிறைவேறவில்லை. இதுவரை ராணுவ அமைச்சர்களாக இருந்த ஏ.கே.அந்தோணி, மனோகர் பாரிக்கர் தற்போது  நிர்மலா  சீதாராமன் ஆகியோரிடம் கேட்டும் பயனில்லை. இனியாவது காலம் தாழ்த்தாமல் இடத்தை வழங்கி மக்கள் நலனை காக்க வேண்டும்.  என்றார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ேபசுகையில், ‘ராணுவத்துக்கு சொந்தமான இடங்கள் திருச்சியில் காலியாக, சிதிலமடைந்து கிடக்கிறது. அதை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க மத்திய  அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பின்னர் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவுகளை, பணிகளை மோடி நிஜமாக்கி வருகிறார்.  திருச்சி வளர்ச்சிக்கு ராணுவ நிலம் ஒதுக்குவது தொடர்பாக 2 ஆண்டாக பேசி வருகிறேன். ராணுவம் தரும் இடத்துக்கு மாற்றாக வேறு நல்ல இடங்களை வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்கிறேன்.  இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. திருச்சியில் இல்லாவிட்டால், தமிழகத்தில் எங்கும் தரலாம்  என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய, எம்பி குமார், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகிய இருவரும், ‘குறுக்கிட்டு பேசுவதற்காக வருந்துகிறோம். திருச்சியில் ராணுவம் வழங்கும் நிலத்துக்கு  மாற்றாக காஞ்சிபுரம் அருகே அதிக மதிப்பு உள்ள நிலத்தை ஒதுக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை ராணுவம் அந்த இடத்தை இறுதி செய்யவில்லை’ என்றனர்.இதனால் அதிர்ச்சியடைந்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘எனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை’ என கூறினார். விழா மேடையிலேயே அதிமுக அமைச்சர் மற்றும் எம்பி இருவரும்  மத்திய அமைச்சருக்கு பதிலடி தந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: