வாழப்பாடி அருகே தடையை மீறி மீண்டும் வங்காநரி ஜல்லிக்கட்டு: 10 பேருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

வாழப்பாடி: வாழப்பாடி அருகே குறிச்சி ரங்கனூர் கிராமத்தில், நேற்று தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடந்தது. இதையடுத்து 10 பேருக்கு வனத்துறையினர் ₹50 ஆயிரம் அபராதம்  விதித்தனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி சுற்றுவட்டார கிராமங்களில், பொங்கல் பண்டிகையையொட்டி வனப்பகுதியில் வங்காநரியை பிடித்து வந்து கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும்  ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்த, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வனத்துறை தடை விதித்தது. இந்நிலையில், கடந்த 18ம் தேதி, வாழப்பாடி அடுத்த  சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில், தடையை மீறி வங்காநரி பிடித்து வந்து வழிபாடு செய்து ஜல்லிக்கட்டு நடத்தினர்.  தகவலறிந்து சென்ற வனத்துறையினர் வங்காநரியை  மீட்டனர். அதை பிடித்து வந்தவர்களிடம் ₹50 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.

இந்நிலையில், ேநற்று வாழப்பாடி அருகே உள்ள குறிச்சி ரங்கனூர் கிராமத்தில், வங்காநரி ஜல்லிக்கட்டு  நடந்தது. முன்னதாக, மாரியம்மன் கோயில் திடலை வங்காநரியுடன் கிராம மக்கள்  வலம் வந்தனர். இதையறிந்த வனத்துறையினர் அங்கு விரைந்து வந்து வங்காநரியை மீட்டு 10 பேருக்கு தலா ₹5 ஆயிரம் வீதம் ₹50  ஆயிரம் அபராதம் விதித்தனர். இனிமேல் வங்காநரி பிடித்து  வழிபாடு மற்றும் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என அவர்களிடம் எழுதி வாங்கிய வனத்துறையினர், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால், 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என  எச்சரித்து சென்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: