தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு 4 மாதங்கள் சம்பளம் பாக்கி: தீபாவளி, பொங்கல் போனஸ் வழங்கவில்லை

வேலூர்: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் தொகுப்பு ஊதிய  பணியாளர்களுக்கு 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை, மேலும் தீபாவளி, பொங்கல்  போனசும் தரப்படவில்லை என்று அவர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை, பிடிஓ அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் தொகுப்பூதியத்தில் 8  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு ₹6 ஆயிரம் முதல் ₹15 ஆயிரம் வரையும், அதிகாரிகளுக்கு ₹15 ஆயிரம் முதல் ₹30 ஆயிரம் வரையும் மாத  ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு மேல்தான் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சம்பளம் வழங்கப்பட்டது. அதன் பிறகு, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர்  என 4 மாதங்களுக்கான ஊதியம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தொகுப்பூதிய பணியாளர்கள் கூறுகையில், ‘தொகுப்பூதியத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யக்கோரி  பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. மாதச் சம்பளம் குறிப்பிட்ட தேதியில் வழங்குவதில்லை. மாதத்தில் 10ம் தேதிக்கு மேல் சம்பளம் வழங்கப்படுகிறது.இந்நிலையில், நிதி பற்றாக்குறையால் கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை.  தீபாவளி, பொங்கல் போனஸ் ₹1000மும் எங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் பண்டிகையை  கொண்டாட முடியாமல் மிகவும் சிரமத்துக்கு ஆளானோம்’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: