யாருக்கும் கூஜா, துதி பாடுவது எங்கள் அகராதியில் கிடையாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: “யாருக்கும் கூஜாவோ, துதி பாடுவதோ எங்கள் அகராதியிலேயே கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று  அளித்த பேட்டி: வீணான வதந்தி பரவியிருக்கிறது. வேண்டுமென்றே யாரோ கிளப்பி விட்டு இருக்கிறார்கள். அவர் (ஓ.பி.எஸ்.) யாகம் நடத்தியதை யார் பார்த்தது?. ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?. எந்த ஆதாரமும்  இல்லாத நிலையில் இதுபோன்ற வதந்திகளுக்கு எப்படி நான் கருத்து தெரிவிக்க முடியும். அதிமுகவுக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும், ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சிலர் செய்கின்ற சதி தான் இது. அதிமுக ஆட்சி இன்றைக்கு கலைந்து விடும், நாளை  கலைந்து விடும் என்று சொல்லி சொல்லி அவர்கள் வாய் தான் ஓய்ந்து போய் இருக்கிறது.

தம்பிதுரை ஆரம்பத்தில் இருந்தே அதிமுகவில் இருந்து வருகிறார். கட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அதிமுக தனித்தன்மை படைத்த கட்சி என்பது அவருக்கு தெரியும். எந்த  நிலையிலும் தன்னுடைய அடையாளத்தை அதிமுக விட்டுக்கொடுக்காது. இது அவருக்கும் தெரியும்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தான் அதிமுக செயல்படுகிறது. நாங்கள் யாருக்கும் கூஜாவோ, துதி பாடுவதோ, அடிமையோ கிடையாது. அது எங்கள் அகராதியிலேயே கிடையாது. பாஜ  அடிமையாக்க நினைக்கிறது என்று தான் சொல்லியிருக்கிறார்.

அடிமையாகி விட்டோம் என்று அவர் சொல்லவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காட்டிய தீர்க்கமான வழியில் தான் நாங்கள் பயணிப்போம்.  பலம் இருக்கிறதா? இல்லையா? என்பது அந்தந்த கட்சிகளுக்கு தெரியும். எங்களை பொறுத்தவரையில் நாங்கள் பலம் வாய்ந்தவர்கள். எங்களை விட பலசாலிகள் தமிழ்நாட்டில் யாரும்  இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: