கட்டிட கழிவுகளை கண்காணிக்க 120 இடங்களில் சிசிடிவி கேமரா: மாநகராட்சி அதிரடி திட்டம்

சென்னை: சட்டவிரோதமாக கட்டிட கழிவுகள் நகரின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதை தடுக்க 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு  செய்துள்ளது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு கட்டிட பணிகள் நடைபெற்றுவருகின்றன. இந்தப் பணிகளுக்கு தேவைப்படும் செங்கல், மணல் உள்ளிட்ட பொருட்களை சாலையில்  கொட்டி வைப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் இடிக்கப்படும் கட்டிட கழிவுகளை இரவு நேரத்தில் நகரின் ஏதாவது ஒரு பகுதியில் கொட்டிவிடுகின்றனர்.  இதனால் போக்குவரத்து பாதிப்பு மற்றும் சுற்றுச்சூழல்மாசு ஏற்படுகிறது. இதைடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் நகராட்சியின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு  சமூகவிரோதிகள் தப்பிவிடுகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய இடங்களில் கேமரா பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர்  நடவடிக்கையாக சாலையில் கட்டிட கழிவுகளை கொட்டும் உரிமையாளரின் கட்டிட உரிமம் ரத்து செய்யப்படும் என்று மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது. குறிப்பாக சேப்பாக்கம் மைதானம் பின்புறம் உள்ள விக்டோரியா ஹாஸ்டல் சாலையில் டன் கணக்கில் கட்டிட கழிவுகள் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுவருகின்றன. இந்நிலையில்  இதை கட்டுப்படுத்த 120 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: சென்னயில் தினசரி ஆயிரக்கணக்கான டன் கட்டிட கழிவுகள் உருவாகின்றன. இந்த கழிவுகளை அறிவியல் முறையில் மறு சுழற்சி செய்ய 15 மண்டலங்களிலும் மறு சுழற்சி மையங்கள்  அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மையங்களுக்கான கழிவுகளை கொண்டு செல்லும் வகையில் உரிய இணைப்பு வசதிகள் செய்து தராத காரணத்தால் அவை முழுமையாக செயல்படவில்லை. இந்நிலையில்  சாலையோரங்கள் மற்றும் நீர் நிலைகளின் ஓரங்களில் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர். குறிப்பாக அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின்  கரையில் அதிக அளவிலான கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டுவருகின்றன. எனவே இவற்றை சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக 120 இடங்கள்  அடையாளம் காணப்பட்டு அது தொடர்பான அறிக்கை  காவல் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது.  காவல் துறையினர் சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா அமைத்து வருகின்றனர். அந்தப் பணியுடன் சேர்ந்த இந்த இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும். இதற்கு தேவையான நிதியை  சென்னை மாநகராட்சி காவல் துறைக்கு வழங்கியுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: