தேசம் காப்போம் விழாவில் பங்கேற்க அழைப்பிதழ்: மு.க.ஸ்டாலினை சந்தித்து திருமாவளவன் வழங்கினார்

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 23ம் தேதி திருச்சியில் ‘தேசம் காப்போம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை சென்னை அண்ணா  அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மாநாட்டிற்கான அழைப்பிதழை விசிக தலைவர் திருமாவளவன் வழங்கி அழைப்பு விடுத்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: திருச்சியில் வரும் 23ம் தேதி நடைபெறும் ‘தேசம் காப்போம்’ மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். மேலும், சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி  பங்கேற்கின்றனர்.இதேபோல், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில  செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளனர்.  இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை மு.க.ஸ்டாலினுக்கு கட்சி சார்பில் வழங்கியுள்ளோம்.

தலைமை செயலகத்தில் துணைமுதல்வரின் அலுவலகத்தில் யாகம் நடத்தியது வரம்பு மீறிய செயலாகும். இது சட்டத்திற்கு புறம்பானது. இது அதிர்ச்சியளிக்கிறது. இதற்குரிய  விளக்கத்தை மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது முதல்வர், துணை முதல்வரின் கடமையாகும். இத்தகைய போக்குகள் ஆட்சி நிர்வாகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை விசிக கண்டிக்கிறது. கொடநாடு விவகாரத்தில் முதல்வர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் முதல்வர் விளக்கம்  அளிக்க கடமைப்பட்டுள்ளார். இதை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். இவ்வாறு கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: