நாடாளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு: திமுக அறிவிப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.மக்களவையின் பதவிக்காலம் வருகிற ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்பாக மக்களவை தேர்தலை நடத்தி முடிப்பதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி  விட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 11 மற்றும் 12ம் தேதி மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் கமிஷனர் டெல்லியில் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல்  அட்டவணை தயாரித்தல் மற்றும் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி இறுதி வாரத்திலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ  தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.அதே நேரத்தில் மக்களவை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றன. தேசிய அளவில் பிரதான கட்சியான பாஜ, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி  பேச்சுவார்த்தையை தொடங்க ஆரம்பித்துள்ளது. அதே போல மாநில கட்சிகளும் தேர்தல் கூட்டணி வேலையை ஆரம்பிக்க தொடங்கியுள்ளன. விரைவில் அவர்கள் தொகுதி பங்கீடு குறித்து  பேசுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை  நடத்திட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பு: நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன்பேச்சுவார்த்தை நடத்திட திமுக தலைமைக் கழகம் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழு தலைவர்- திமுக பொருளாளர் துரைமுருகன். குழு உறுப்பினர்கள்- துணை பொது செயலாளர்  இ.பெரியசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதே போல, திமுக பொது செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், “ நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு  அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் திமுக முதன்மை செயலாளர் டி.ஆர். பாலு, துணை பொது செயலாளர்கள் சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, திமுக மாநிலங்களவை குழு தலைவர்  கனிமொழி எம்.பி., கொள்கை பரப்பு செயலாளர்கள் திருச்சி சிவா, எம்.பி., ஆ.இராசா, டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்” இவ்வாறு அறிவிப்பில்  உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: