புதுக்கோட்டை விராலிமலையில் கின்னஸ் ஜல்லிக்கட்டில் 1600 காளைகள் வேடிக்கை பார்த்த 2 பேர் மாடு முட்டி பலி

புதுக்கோட்டை: விராலிமலையில் நடந்த கின்னஸ் உலக சாதனை ஜல்லிக்கட்டில் 1,600 காளைகள் சீறிப்பாய்ந்தன. அப்போது வேடிக்கை பார்த்த 2 பேர் மாடு முட்டி பலியாகினர். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. உலகசாதனை முயற்சியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன்  குளத்தில் பட்டமரத்தான் கருப்புச்சாமி கோயில் விழா கமிட்டி சார்பில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடந்தது. இதற்காக புதுக்கோட்டை  மாவட்டம் மட்டுமின்றி, மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், அரியலூர், பெரம்பலூர் உள்பட தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,600 காளைகள் வந்தன. மாடுபிடி வீரர்கள் 600 பேர்  பங்கேற்றனர். அவர்களுக்கு மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்த பின்னரே களத்தில் இறங்க அனுமதிக்கப்பட்டனர். அதுபோல் கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை  செய்தனர். ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி காலை 8.20 மணிக்கு பச்சை கொடி அசைத்து துவக்கிவைத்தார். முதலில் 3 கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அவற்றை யாரும் பிடிக்கவில்லை. பின்னர் வாடிவாசல் வழியாக ஒவ்வொரு காளையாக அவிழ்த்துவிடப்பட்டது. வாடிவாசல் முன் திரண்டு இருந்த வீரர்களை பார்த்த சில காளைகள் வெளியே வராமல் உள்ளேயே நின்றது. சில  காளைகள் ஆக்ரோஷமாக நான்கு கால்களும் தரையில் படாமல் அந்தரத்தில் பறந்தபடி சீறிப்பாய்ந்தன. பல வீரர்களால் அந்த காளைகளை தொடக்கூட முடியவில்லை.

சிலர் துணிந்து மாடுகளின் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். அவர்களை காளைகள் பந்தாடியது. சில காளைகள் களத்தில் கம்பீரமாக நின்று விளையாடியது. அவை மைதானத்தை 4 புறமும்  சுற்றி சுற்றி, வீரர்களை பயமுறுத்தியது. ஆனாலும் சில காளையர் வீரத்தை காட்டி அந்த காளைகளை அடக்கினர். இதில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கு சைக்கிள், தங்ககாசு,  மெடல் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதே போல் மாடு பிடித்த வீரர்களுக்கு சைக்கிள், தங்ககாசு பரிசு வழங்கப்பட்டது. போட்டியின்போது மாடுகள் முட்டியதில் 26 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்குள்ள மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. 7 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டனர். மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த பார்வையாளர்கள் திருச்சி ஜி.ஏ.புரம் சதீஷ்குமார் (25) புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும், இலுப்பூர், சொரியம்பட்டி ராமு (35) திருச்சி  மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர்.

உலக சாதனையாக அறிவிப்பு: ஜல்லிக்கட்டு  திருவிழாவை காண உலக சாதனை கூட்டமைப்பு  சார்பில் லண்டனில் இருந்து வந்த மார்க், மெலனே ஆகியோர் வந்திருந்தனர். போட்டி முடிவில்  1600 மாடுகள் அவிழ்த்து விடப்பட்டது. உலக அளவில் விராலிமலை ஜல்லிக்கட்டில்தான் என ெதரியவந்ததால் இந்த ஜல்லிக்கட்டு உலக சாதனை  படைத்துள்ளதாக  அவர்கள் அறிவித்தனர்.இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, பாஸ்கரன், சி.வி.சண்முகம், கடம்பூர் ராஜூ, செல்லூர் ராஜூ, உதயகுமார், கலெக்டர் கணேஷ், மத்திய  மண்டல ஐஜி வரதராஜூ, டிஐஜி லோகநாதன் மற்றும் எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காலதாமதமாக வந்த ஓபிஎஸ்

ஜல்லிக்கட்டு காலை 8.20 மணிக்கு துவங்கியது. இதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காலை 8.10 மணிக்கே மைதானத்திற்கு வந்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வருவார் என கட்சியினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் வரவில்லை. காலை 9 மணிக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார். பின்னர் பகல் 11.50 மணிக்கு விழா மேடைக்கு துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் வந்தார். இவர் சிறிது நேரம் மேடையில் அமர்ந்திருந்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வளர்த்த காளை வெற்றி பெற்றதாக அறிவித்து அவருக்கு பரிசு வழங்கிவிட்டு  சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: