கிழக்கு தாம்பரம் ஆனந்தபுரம் பகுதியில் சமூக விரோதிகளின் கூடாரமான பூங்கா: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தாம்பரம்: கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், அப்பகுதி பொதுமக்கள் வசதிக்காக சுப்பராயன் பூங்கா சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.  பின்னர் நாளடைவில்  பூங்காவை யாரும் பராமரிக்காமல் கைவிட்டனர்.இதனால் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பூங்காவில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் எரிவதில்லை. பெரும்பாலான மின்விளக்கு கம்பங்களில் உள்ள மின்விளக்குகளை சமூக விரோதிகள் கல்வீசி உடைத்துவிட்டனர்.

மின்விளக்கு இல்லாததால் தினமும் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்தவும், கஞ்சா புகைக்கவும், பாலியல் வேலைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மாலை நேரங்களில் பொதுமக்கள் பூங்காவிற்கு  செல்லவே அஞ்சி வருகின்றனர்.

பூங்காவில் பல இடங்களில் மதுபாட்டில்கள் நிறைந்தும், மின்விளக்கு கம்பங்களில் வயர்கள் அறுக்கப்பட்டு, மின்விளக்குகள் உடைக்கப்பட்டும், கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகியும் காணப்படுகின்றது. இதுகுறித்து அப்பகுதி  மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட 22வது வார்டு, கிழக்கு தாம்பரம், ஆனந்தபுரம் பகுதியில் சுப்ராயன் பூங்கா உள்ளது. இந்த பூங்கா கடந்த 2016-17ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இதில் இப்பகுதி  பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள பாதை, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், நீர்வீழ்ச்சி, பூங்கா என அமைக்கப்பட்டன.ஆரம்ப காலத்தில் இப்பகுதி பொதுமக்கள் பூங்காவிற்கு காலை மற்றும் மாலை நேரங்களில் வந்து நடைப்பயிற்சி மேற்கொள்ளவும், இருக்கையில் அமர்ந்த ஓய்வெடுக்கவும், குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தி வந்தனர்.  பின்னர் பூங்காவை முறையாக பராமரிக்காததால் பூங்காவில் செடிகள் அதிகமாக வளர்ந்து காட்சியளிக்கிறது.மேலும் நீர்வீழ்ச்சியின் மோட்டாரை சமூக விரோதிகள் திருடி சென்றதால் நீர்வீழ்ச்சி பயன்பாட்டில் இல்லை. மின்விளக்குகளை சமூகவிரோதிகள் சிலர் கல்லால் அடித்து உடைத்தும், மின்விளக்கு கம்பங்களில் உள்ள வயர்களை  அறுத்தும் உள்ளனர். இதனால் இரவு நேரங்களில் பூங்கா முழுவதும் இருள் சூழ்ந்து காட்சியளிக்கின்றது.

இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோதிகள் பூங்காவில் அமர்ந்து மது அருந்துவது, கஞ்சா புகைப்பது, பாலியல் செயல்களில் ஈடுபடுகின்றனர்.  போலீசாரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளில்  ஈடுபடாததால் சமூகவிரோதிகள் கவலை இல்லாமல் உள்ளனர். இத்தகைய செயல்களால் மாலை நேரத்தில் பூங்காவிற்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் முகம் சுழித்தபடி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட  உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: