தாயை தாக்கிய எதிர் வீட்டுக்காரர் குறித்து புகாரளித்த அண்ணன், தம்பி மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல்

* மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

* கானத்தூர் காவல் நிலையத்தில் பரபரப்பு

துரைப்பாக்கம்: சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூர் எம்.ஜி.ஆர் சாலையை சேர்ந்தவர் சதீஷ் (25) மீனவர். இவரது எதிர் வீட்டில் வசிப்பவர் சுரேஷ் (40). தொலைக்காட்சி சீரியல் படப்பிடிப்புகளுக்கு வீடுகளை வாடகைக்கு  பிடித்து தருகிற வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு சுரேஷ் பைக்கை சதீஷ் வீட்டு வாசலில் நிறுத்தி உள்ளார். இதனால் சதீஷின் தாய் மலர் அவரிடம் பைக்கை வேறு இடத்தில் விடும்படி கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம்  ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சுரேஷ், சதீஷின் தாய் மலரை கீழே தள்ளியுள்ளார். இதில் காயமடைந்த மலரை அக்கம்பக்கத்தினர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கானத்தூர் போலீசில் புகார் அளிக்க சதீஷ் தனது சகோதரர் விக்னேஷுடன் சென்றுள்ளார். அங்கிருந்த சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி புகாரை வாங்க மறுத்ததோடு, காவல் நிலையத்தில் இருந்த  சுரேஷிடம் மன்னிப்பு கேட்குமாறு கூறியுள்ளார்.

இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததால் போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 5 போலீசார், சகோதரர்களான சதீஷ் மற்றும் விக்னேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் சதீஷுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சதீஷை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி தனியார் மருத்துவமனையில் சதீஷை சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை  அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விக்னேஷும், அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: