பெங்களூரு சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு சலுகை வழங்கியது உண்மை: சிறை நிர்வாகம் ஒப்புக் கொண்டது

பெங்களூரு: ‘சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு சிறை விதிமுறைகளை மீறி சலுகை வழங்கியுள்ளதாக வினய்குமார் கமிட்டி கொடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது  உண்மைதான்’ என்று சிறை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.மறைந்த முதல்வராக ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில்  விதிமுறைகளை  மீறி சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதாகவும், இதற்காக ரூ.2 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா குற்றம்சாட்டினார். இது குறித்து நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அறிக்கையை  2017 அக்டோபர் மாதம் அரசிடம் வழங்கியது. அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.வினய்குமார் குழு கொடுத்துள்ள அறிக்கையை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி.நரசிம்ம மூர்த்தி கடந்த 2018ம் ஆண்டு சிறை துறையிடம் விண்ணப்பித்தார். அவரின் கோரிக்கைக்கு ஓராண்டாக பதில்  கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக 19.1.2019 (நேற்று முன்தினம்) மாநில அரசின் கூடுதல் செயலாளரும், சிறைத்துறை பொது தகவல் அறியும் உரிமை குழு அதிகாரியுமான  எம்.ஆர்.ஷோபா வழங்கியுள்ள அறிக்கையில், சிறையில் சசிகலாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் தொடர்பாக வினய்குமார் கொடுத்துள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:2017 பிப்ரவரி 15ம் தேதி சசிகலா உள்பட 3 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு வழங்குவதற்காக நான்கு  கைதிகளை வேறு செல்களுக்கு  மாற்றியுள்ளனர். சசிகலா தங்கியுள்ள அறையில் புதியதாக திரைச்சீலை போடப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்து கொடுப்பதற்காக அஜந்தா என்ற பெண் கைதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அறையில்  கூடுதலாக நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. சசிகலா கேட்கும் போதெல்லாம் உதவி செய்வதற்கு ஆட்களை ஈடுபடுத்தியுள்ளனர்.மேலும் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. சசிகலா விஷயத்தில் எந்த விதிமுறைகளும் பின்பற்றவில்லை. கைதிகளுக்கு குறிப்பிட்ட சில மணி நேரம்  மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால், சசிகலாவை சந்தித்து பேச சில சமயங்களில் 4 மணி நேரத்திற்கு மேல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு தனி இடம் உள்ளது. ஆனால், சசிகலாவை  சந்தித்தவர்கள் அவர் தங்கியுள்ள அறையில் சென்று சந்தித்து பேசியுள்ளனர். பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு ஆண்கள் செல்லக்கூடாது என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது.உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல்படி நாடு முழுவதும் உள்ள சிறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், செல்போன் உரையாடல்களை பதிவு செய்ய ஜாமர் அமைக்க வேண்டும் என்று மத்திய  அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவு பரப்பன அக்ரஹாரா சிறையில் பின்பற்றப்படவில்லை. சிசிடிவி கேமராக்கள் இயங்கவில்லை. சிறை வளாகத்தில் உள்ள 19 ஜாமர்களும் செயல்படவில்லை.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு மீது ரூபா குற்றச்சாட்டு

வினய்குமார் அறிக்கை குறித்து போலீஸ் அதிகாரி ரூபா கூறுகையில், ‘‘சிறையில் கைதிகளுக்கு சலுகை வழங்கப்பட்டிருப்பது உண்மைதான். சிறையில் தவறுகள் நடந்துள்ளது என்று தெரிந்த பின்னரும் மாநில அரசு  நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறது’’ என்று மீண்டும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: