ரபேல் போர் விமானப் பேரம் குறித்து உடனடியாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை: ரபேல் போர் விமானப் பேரம் குறித்து  உடனடியாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு, பிரதமர் நரேந்திரமோடி  உத்தரவிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று வெளியிட்ட  அறிக்கை:ஒரு தகவலையும் வெளியே விடாமல் அனைத்து விபரங்களையும் பரம ரகசியமாக வைத்துக் கொண்டு கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் நேரடியாகப் பதிலே சொல்லாமல்  “ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஊழல்  நடைபெறவில்லை” என்று பிரதமர் நரேந்திரமோடி செயற்கையாக அணிந்திருந்த “போலி பாதுகாப்பு கவசம்” ஆங்கில பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரை மூலம், “கழற்றி” வீசப்பட்டுள்ளது.நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பிற்கான ஒப்பந்தம் ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி ஆழமான உள்நோக்கத்துடன் ஆரம்பத்திலிருந்தே தன்னிச்சையாகச் செயல்பட்டு-அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்த  மனோகர் பாரிக்கருக்கும் நெருக்கடி கொடுத்து எவ்வளவு மோசமான முறைகேடுகளுக்கு வித்திட்டுள்ளார் என்பது கடைசியில் “பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது” என்ற கதையாகியிருக்கிறது.பத்திரிகையில் வெளிவந்துள்ள சில முக்கிய முறைகேடுகள்:

* விமானத்தில் இந்தியாவுக்கு ஏற்ற வடிவமைப்பு மற்றும் தேவைக்கேற்ற மாற்றங்கள் அடங்கிய 13 குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெற வேண்டும் என்று கூறி 1.3 பில்லியன் டாலர் அதிகமாகக் கொடுப்பதற்கு பிரதமர் ஒப்புக்  கொண்டதால் ஒரு ரபேல் போர் விமானத்தின் விலை முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிர்ணயிக்கப்பட்டதை விட பாஜ ஆட்சியில் 41.42% சதவீதம் அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.

* ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது “126 ரபேல் போர் விமானங்களிலும் இதுபோன்ற இந்தியாவிற்கு ஏற்ற 13 அம்சங்கள் இடம் பெற வேண்டும்” என்று  வலியுறுத்தப்பட்டது.

ஆனால் பாஜ அரசு இதை 36 ரபேல் போர் விமானங்களுக்கு மட்டும் செய்தால் போதும் என்று குறைத்து விட்டது.

* ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஈரோ டைஃபூன் கன்சார்ட்டியம் என்ற நிறுவனம் அளிக்க முன் வந்த “20 சதவீத விலை தள்ளுபடியை” மத்திய பாஜ அரசு சாதகமாக பயன்படுத்தியிருந்தால் பிரான்சிடமிருந்து வாங்கும் 36  ரபேல் போர் விமானங்களின் விலையை பெருமளவு குறைத்திருக்க முடியும். அதை பாஜ அரசு செய்யவில்லை.

* பிரான்ஸ் அரசாங்கத்திடம் இறையாண்மை மிக்க உத்தரவாதம் பெற வேண்டும் என்ற பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் ஆலோசனையை பாஜ அரசு ஏற்காமல் நிராகரித்தது. போர் விமானங்களை வழங்கும் “டஸால்ட்  ஏவியேசன்” கம்பெனியின் நிதி நிலவரத்தைப் பார்த்தால் அரசு வாங்கியுள்ள சாதகமானது எனச் சொல்லப்படும் கடிதம் ஆபத்தானது.

இவ்வளவு முறைகேடுகள் நிறைந்த ரபேல் ஒப்பந்தத்திற்கு யார் ஒப்புதல் அளித்தது தெரியுமா? “ஊழலை ஒழிப்பேன்” “நாட்டின் பாதுகாப்பே எனக்கு மிக முக்கியம்” “பாதுகாப்பு பிரச்னையில் இப்படி எதிர்க்கட்சிகள் பொய்  குற்றச்சாட்டு கூறலாமா?” என்றெல்லாம் பேசி நாடகமாடி வரும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான “நாட்டின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சரவைக் குழு தான் என கட்டுரை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. ஆகவே இனியும் எங்கள் ஆட்சியில் ஊழல் நடக்கவில்லை என்று வெற்று வாய்ச்சவடால் முழக்கமிட்டு மக்களை ஏமாற்றுவதையும், எதிர்க்கட்சிகள் பொய் சொல்கின்றன என்ற ஆதாரமற்ற பிரசாரத்தையும் பிரதமர் நரேந்திரமோடி  உடனடியாக கைவிட்டு பிரதமர் ஆசனத்தின் பெருமையை இப்போதாவது காப்பாற்ற முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாட்டின் பாதுகாப்பில் பிரதமருக்கு உள்ள அக்கறையை விட அதிகமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், எதிர்கட்சிகளுக்கும் இருக்கிறது என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நாட்டின் பாதுகாப்பில்  உள்ளபடியே அக்கறை இருக்குமென்றால், மடியில் கனமில்லை என்ற தைரியம் இருக்கிறதென்றால் ரபேல் போர் விமானப் பேரம் குறித்து உடனடியாக “பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு” பிரதமர் நரேந்திரமோடி  உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: