முத்துப்பேட்டை அருகே புயல் நிவாரணத்தில் முறைகேடு கண்டித்து மக்கள் சாலை மறியல்: நடுரோட்டில் தொழுகை, சமையல் செய்தனர்

முத்துப்பேட்டை: திருவாரூர்  மாவட்டம் முத்துப்பேட்டை கஜா புயலால் பாதிக்கப்பட்டது.  நிவாரணம்  வழங்குவதில் வருவாய்த்துறை  அதிகாரிகள் ஆளுங்கட்சியினருடன் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி அனைத்து வார்டு மக்களும் நேற்று முத்துப்பேட்டை அடுத்துள்ள  செம்படவன்காட்டில் கிழக்கு கடற்கரை சாலையில் நிலத்தடிநீர் பாதுகாப்பு  குழு தலைவர் கருத்தப்பா சித்திக் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார், வருவாய் ஆய்வாளர் கஜேந்திரன் தலைமையில்  அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் போராட்டம் காலை 10 மணிக்கு துவங்கி  மதியத்தை  கடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்காக, நடுரோட்டில் அடுப்பு  வைத்து சமையல் செய்து வழங்கப்பட்டது. மேலும் தொழுகை நேரம் வந்ததும்  சாலையிலேயே இஸ்லாமியர்கள் தொழுகையிலும் ஈடுபட்டனர். இதையடுத்து   திருத்துறைப்பூண்டி தாசில்தார் மகேஷ்குமார், திமுக முன்னாள் பேரூராட்சி  தலைவர் கார்த்திக், திமுக நகர செயலாளர் நவாஸ்கான், இன்ஸ்பெக்டர்கள்   ராஜேஷ், சுப்ரியா, எஸ்ஐ கணபதி  ஆகியோர்  தலைமையில் அமைதி கூட்டம்  சாலையிலேயே நடந்தது. இதில்  தங்களது கோரிக்கைகளை மனுவாக தரும்படியும்,

அதனை  கலெக்டர் கவனத்திற்கு எடுத்து சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  அதிகாரிகள் கூறினர். அதன் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  அதிகாரிகளிடம் மனு அளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து  தடைபட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே  கல்லார் மீனவர்களின் 14 படகுகளுக்கு புயல் நிவாரணம் வழங்கப்படாமல் உள்ளது. எனவே 14  படகுகளுக்கும் உடனே நிவாரணம் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி நேற்று பாப்பாக்கோயிலில் கிராம பஞ்சாயத்தார் ஆதிமூலம் தலைமையில்  ஏராளமானோர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.  நாகை தாசில்தார் இளங்கோவன்  பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உரிய கணக்கு எடுத்து நிவாரணம் வழங்குவதாக  உறுதியளித்ததன் பேரில் போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் நாகை- திருத்துறைப்பூண்டி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: