ஜாக்டோ - ஜியோ கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை, ஜன.20: ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக பள்ளிக்கல்வித்துறை அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த பிள்ளைகளும் சிறு வயதிலேயே பள்ளிகளில் சேர்ந்து ஆங்கில வழிக்கல்வி கற்பதற்கும் ஏதுவாக எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் பயன்தரும் என்றால் அது வரவேற்கத்தக்கது. அதே சமயம் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் பாடங்களை கற்றுத்தருவதற்கு மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது என்றும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.

மேலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 7 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர். அதாவது அங்கன்வாடி மற்றும் சத்துணவு மையங்களை மூடக்கூடாது என்றும், தொடக்கப் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளிகளுடன் இணைத்தால் தொடக்கப்பள்ளிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு கவனத்தில் கொண்டு அதற்கேற்ப முறையான, சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் வலியுறுத்துகின்றனர். எனவே தமிழக அரசு ஜாக்டோ - ஜியோ அமைப்பின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி சுமூகத் தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும்.

குறிப்பாக தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டம் நடைபெறாமல் இருக்கும் போது பொது மக்களுக்கான பணிகளிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்வியிலும் தடையோ, இடையூறோ, தடங்கலோ ஏற்படாது என்பதை தமிழக அரசு உணர்ந்து உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க முன்வர வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: