நிரந்தர மாற்றுத்திறனாளி என்று மருத்துவ போர்டு அறிவித்ததால் ஓய்வு பெறும்வரை எளிய பணி வழங்க வேண்டும்

சென்னை: நிரந்தர மாற்றுத்திறனாளி என்று மருத்துவ போர்டு அறிவித்தால் அவர்களுக்கு தொடர்ந்து எளிய பணி வழங்க வேண்டும் என்று டிரைவர் தொடர்ந்த வழக்கில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வியாசர்பாடியைச் சேர்ந்த கே.முரளி சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் கடந்த 1992ல் டிரைவராக சேர்ந்தார். அயனாவரம் டிப்போவில் 27 ஆண்டுகள் பணியாற்றிய நிலையில் கடந்த 2017 ஏப்ரலில் கடுமையான முதுகு வலியால் பாதிக்கப்பட்ட முரளிக்கு முதுகுத்தண்டில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  இதையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனை செய்ததில் அவரால் டிரைவராக பணியாற்ற முடியாது என்று மருத்துவ போர்டு சான்றிதழ் தந்தது. இதையடுத்து, தனக்கு எளிதான பணி வழங்குமாறு மாநகர போக்குவரத்து கழகத்திற்கு மனு கொடுத்தார். அதன் அடிப்படையில் அவருக்கு செக்யூரிட்டி பணி வழங்கப்பட்டது.

இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ போர்டில் ஆஜராகி சான்றிதழை புதுப்பிக்குமாறு மாநகர போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து முரளி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கு நீதிபதி எஸ்.விமலா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சார்ஜ் வில்லியம்ஸ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரர் முதுகுத்தண்டு பாதிக்கப்பட்டதால் அவரால் டிரைவராக பணியாற்ற முடியாது. இது மருத்துவ போர்ட் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, அவருக்கு எளிய பணி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவர் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு முறை மருத்துவ போர்டில் ஆஜராகி சான்றிதழ் பெற வேண்டும் என்று போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது. இது மாற்றுத்தினாளிகள் பாதுகாப்பு மற்றும் உரிமை சட்டத்திற்கு எதிரானது. எனவே, மருத்துவக் கல்லூரி இயக்குநர் ஒரு மருத்துவ போர்டை அமைத்து அதில் மனுதாரர் முரளிக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். அதில் மனுதாரர் நிரந்தரமான மாற்றுத்திறனாளி என்று பரிசோதனையில் தெரியவந்தால் அவருக்கு தொடர்ந்து எளிய பணியை மாநகர போக்குவரத்து கழகம் வழங்க வேண்டும். தற்காலிக பாதிப்புதான் என்று சான்றிதழ் தரப்பட்டால் அவர் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டதன் அடிப்படையில் 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ போர்டில் ஆஜராகி சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: