கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை வெளிநாட்டில் இருந்து 8 சிலைகள் மீட்பு: மத்திய கலாச்சாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு சொந்தமான 8 புராதன சிலைகள் மீட்கப்பட்டதாக மத்திய கலாச்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் உள்ள அனைத்து சிலைகளையும் ஆவணப்படுத்தும் பணி, இந்திய தொல்லியல் துறையிடம் 1998ம்ஆண்டு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து,  48 ஆயிரம் சிலைகளை ஆவணப் படுத்தும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வந்தது.  2013ம் ஆண்டு, அப்பணி முடிந்து விட்டது.  இதில், ‘13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகளுக்கு ஆவணங்கள் எங்களிடம் இல்லை’ என,  இந்திய தொல்லியல் துறை  தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனால், தமிழகத்தில் 13,700 சிலைகள் மாயமானதாக கருதப்பட்டாலும், தமிழக அரசின் சார்பில், ‘சிலைகள் மாயம் என்று கூறுவது தவறு, ஆவணங்கள் இல்லை என்பதுதான் சரி’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், புராதன மற்றும் கலை பொக்கிஷங்கள் சட்டம் 1972க்கு எதிராக உள்நாட்டிலிருந்து எடுத்துச் செய்யப்பட்ட புராதன சிலைகளை மீட்க, இந்திய தொல்லியல் துறை தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட பொக்கிஷங்களை வெளிநாடுகளுக்கு சென்று மீட்டு வருவதற்கான  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2015 முதல் 2018ம் ஆண்டு வரை, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவின் 28 புராதன சிலைகள் மீட்கப்பட்டுள்ளன.

தமிழக புராதன பொக்கிஷங்களை பொறுத்தவரை, 8 சிலைகள் மீட்கப் பட்டுள்ளன. இதில், சிங்கப்பூரிலிருந்து உமா பரமேஸ்வரி சிலையும், அமெரிக்காவிலிருந்து மாணிக்கவாசகரின் வெண்கல சிலை, விநாயகரின் உலோக சிலை, சோழர் காலத்தின்  தேவி, பார்வதியின் உலோக சிலை, பூதேவி உலோக சிலை, சக்கரதாழ்வாரரின் உலோக சிலை, துர்க்கை சிலை ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.  மீட்கப்பட்ட சிலைகள் தமிழ் நாடு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடமும், டெல்லியில் உள்ள கலை, கலாச்சார மையத்திடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக என்று மத்திய கலாசாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: