நில அபகரிப்பு வழக்கு 3 ஆண்டுகளாக நிலுவை இறுதி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நில அபகரிப்பு வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூரை சேர்ந்த சி.நாகராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், திருவள்ளூர் மாவட்டம் சிறுவானூர் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமாக 21 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கடந்த 41 வருடங்களாக விவசாயம் செய்து வந்தோம்.

 இந்நிலையில் கடந்த 2015 ஏப்ரல் மாதம் கிஷன்லால் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் வந்து எங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தார். இதையடுத்து, திருவள்ளுர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தேன். அவரது அறிவுறுத்தலின்பேரில் புல்லரம்பாக்கம் போலீசார் கிஷன்லால் உள்ளிட்டோர் மீது சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இதுவரை அந்த எப்ஐஆர் மீது இறுதி அறிக்கையை போலீசார் தாக்கல் செய்யவில்லை. எனவே, இந்த வழக்கில்  புல்லரம்பாக்கம் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் ெசய்யுமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.  இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 3 ஆண்டுகளாகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. எனவே, சம்மந்தப்பட்ட போலீசார் 2 மாதங்களுக்குள் இறுதி அறிக்கை அல்லது வழக்கை முடித்துவைக்கும் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: