10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் தமிழகம் முழுவதும் தீவிர போராட்டம்

சென்னை: பொருளாதார அடிப்படையிலான 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் தமிழகம் முழுவதும் தீவிர போராட்டத்தை நடத்த உள்ளதாக திக தலைவர் கி.வீரமணி அறிவித்துள்ளார்.  பொருளாதார அடிப்படையில் உயர் ஜாதியினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியது குறித்து அனைத்து கட்சிகள் ஆலோசனை கூட்டம் பெரியார் திடலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திக தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.

இதில், அ.ராசா(திமுக), திருமாவளவன் (விசிக), வன்னியரசு(விசிக), ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி) மல்லை சத்யா(மதிமுக), நிஜாமுதின் (இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்), பேராயர் எஸ்றா.சற்குணம்(இந்திய சமூக நீதி இயக்கம்), பொன்.குமார்(விவசாயிகள் தொழிலாளர் கட்சி), உமர் பாரூக்(எஸ்.டி.பி.ஐ), வீரபாண்டியன்(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), சுபவீரபாண்டியன் (திராவிட இயக்க தமிழர் பேரவை), பிரின்ஸ் கஜேந்திர பாபு(பொதுபள்ளிகளுக்கான ஒருங்கிணைப்பாளர்), சாந்தி(சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம்), கோ.கருணாநிதி (பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு) உட்பட 23 தோழமை அமைப்பினர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பிறகு கி.வீரமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

அவரசரம் அவரசமாக ஒரே நாளில் உயர் ஜாதியினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது சமூக நீதியின் வேரை வெட்டுவதாகும். இதனால், பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். இந்த சட்டத்திருத்தம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. ஆர்.எஸ்.எஸ் இன் உத்தரவுப்படி மோடி அரசு இதை செய்துள்ளது.  5 மாநில தேர்தல் தோல்விக்கு பின் உயர்ஜாதி ஓட்டுக்களை பெற இதை கொண்டுவந்துள்ளனர். இதில் முரண்பாடு உள்ளது. தமிழ்நாடு தான் சமூக நீதியில் இந்தியாவிற்கு வழிகாட்டி மாநிலம் ஆகும். திமுக, திக தந்த அழுத்தத்தால் தான் மண்டல் கமிஷன் வந்தது. எனவே, இங்கிருந்து எதிர்ப்பு கிளம்புகிறது. நீதிமன்ற போராட்டத்தை திமுக தொடங்கியுள்ளது. திக மற்றும் மற்ற அமைப்புகள் இதேபோல், வழக்கு போட தயாராய் உள்ளது.

மறுபுறம் மக்களை திரட்டி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும். பிரச்சாரம் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரே மேடையில் அனைவரும் இணைந்து பெரிய அளவில் போராட்டம் நடத்த உள்ளோம். போராட்ட தேதியானது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் முடிவு செய்யப்படும். சென்னையில் இருந்து போராட்டம் தொடங்கும். 10 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவோம்.

பின்னர், விசிக தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

பொருளாதார அடிப்படையில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குகிற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சமூக நீதிக்கு எதிரானது என்பதை வலியுறுத்தும் விதமாக மக்களை திரட்டி போராட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக திமுக உள்ளிட்ட தோழமை கட்சிகள் இணைந்து கூட்டம் நடைபெறுகிறது. ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என விசிக சார்பில் கருத்தை தெரிவித்துள்ளோம். பொதுமக்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி ஒன்றை நடத்துவது என்ற கருத்தையும் தெரிவித்துள்ளோம். இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேறு நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

கொள்கையை விட மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பது தான் முக்கியம். அனைத்து தோழமை கட்சிகளும் சேர்ந்து ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுப்போம். உச்சநீதிமன்றத்தில் இதை எதிர்த்து விசிக சார்பில் வழக்கு தொடர உள்ளோம். 10 சதவீத இடஒதுக்கீடு என்பது அடிப்படை அம்சங்களை பாதிக்கிறது. ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம் இது அல்ல. இவ்வாறு கூறினார். மேலும், கூட்டத்தில், நீதிமன்றங்கள் வழியாக செயல்படுவது, மக்கள் மத்தியில் பிரச்சாரம், மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம், சென்னையில் மாபெரும் பேரணி, துண்டறிக்கை இயக்கம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: