கும்பகோணம் கோயில்களில் தம்பிதுரை சிறப்பு யாகம்: அதிமுக தலைவர்கள் கலக்கம்

கும்பகோணம்: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களில் யாகம் செய்தார். இதனால், அதிமுக தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குடும்பத்துடன் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் வந்தார். நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பாம்புரத்திலுள்ள ஷேசபுரீஸ்வரர் கோயிலிலுள்ள ராகு-கேது பகவானுக்கு பரிகாரம் செய்வதற்காக, தனது மனைவி, மகளுடன் சென்றார். இதற்காக கும்பகோணம் திருநாராயணபுரம் சாலையிலுள்ள சொகுசு விடுதியில் அவரது உதவியாளர் சாதிக்கின் பெயரில் 5 அறைகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. காலையில் தனது சொந்த காரில் வந்தவர், மாவட்ட நிர்வாகம் வழங்கிய காரில் கோயிலுக்கு சென்றார்.

திருப்பாம்புரம் கோயிலில் காலையில் தொடங்கி  பரிகார ஹோமம் பூஜை நடைபெற்றதால், தனது மகளை மட்டும் கோயிலில் விட்டுவிட்டு மனைவியுடன், நாச்சியார் கோயிலிலுள்ள சீனிவாசபெருமாளை தரிசனம் செய்துவிட்டு, திருநாரையூரிலுள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று மங்களசனீஸ்வரனுக்கு சிறப்பு பூஜைகள், பரிகாரங்கள் செய்து, விளக்கேற்றினார். பின்னர் திருச்சேறையில் 108 வைணவ தலத்தில் 12-வது தலமான சாரநாதப்பெருமாள் கோயிலிலுள்ள பஞ்சலட்சுமியை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் திருப்பாம்புரத்துக்கு சென்றார்.

இந்நிலையில் எதிரிகள் அழியவும், ஆட்சி, அதிகாரம், பணபலம், ஐஸ்வர்யங்கள் உள்ளிட்டவைகள் கிடைக்க வேண்டும், எதிரிகள் விலகி ஓட வேண்டும். எதிரிகளே இல்லாமல் வாழ வேண்டும். நினைத்த காரியம் அனைத்தும் எளிதில் நடைபெற வேண்டும் உள்ளிட்டவைகளை பிரார்த்தனை செய்துகொண்டு சுவாமியை வழிபட்டார். இதற்காக திருப்பாம்புரம் கோயிலில் சுமார் 10 மணி நேரம் சிறப்பு யாகம் நடந்தது.

பெண்ணுக்கு திருமணம் தடை என்றால், திருப்பாம்புரம் ராகு-கேது கோயிலில் அர்ச்சனை செய்வது வழக்கம். ஆனால் தம்பிதுரை, தனது மகளுக்கு திருமணம் பரிகாரம் என்ற பெயரில், நேற்று முழுவதும் பரிகாரம் செய்வது ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் அதிமுக தலைவர்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது. தம்பிதுரை கும்பகோணம் வருவது பற்றி, அதிமுக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அப்படி ஒன்றும் தகவல் இல்லையே என தெரியாததுபோல் கூறினர். ஆனால் கட்சி தலைமையிலிருந்து, கும்பகோணம் அதிமுக நிர்வாகிகள் யாரும் தம்பிதுரையை சந்திக்கக்கூடாது, வரவேற்க கூடாது என உத்தரவு வந்ததுதான் காரணம் என கட்சியினர் தெரிவித்தனர்.

துணை சபாநாயகர் பதவி ஏன்?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாரையூரில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களிடம் பேசுகையில், ``தமிழகத்திற்கு என பா.ஜ.க. எந்தவிதமான சலுகையும் நாடாளுமன்றத்தில் அறிவிக்கவில்லை. தமிழக உரிமைக்காக குரல் எழுப்பிய அதிமுகவை சேர்ந்த 34 எம்பிக்களை சஸ்பெண்ட் செய்தனர். இதனை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரியும், திரும்ப பெறவில்லை. நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்ததுபோல் பாஜக பேசி வருகிறது ஏற்புடையது அல்ல. பொதுவாக எதிர்க்கட்சிகளுக்கு இந்த பதவியை விட்டு தருவதுதான் வழக்கமாக உள்ளது. 3-வது பெரிய கட்சி என்ற அடிப்படையில்தான் மக்களவை துணை சபாநாயகர் பதவி அதிமுகவுக்கு கிடைத்தது’’ என்று பா.ஜ.க.வுக்கு பதில் அளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: