திருட்டுத்தனமாக மீன் பிடிப்பதை தடுத்ததால் 2 பேரை அடித்துக்கொன்று சாத்தனூர் அணையில் வீச்சு

* ஒருவர் சடலம் மீட்பு

* மக்கள் மறியலால் பரபரப்பு

தண்டராம்பட்டு: சாத்தனூர் அணையில் திருட்டு மீன் பிடிப்பதை தடுத்த 2 பேரை கொலை செய்து சடலம் அணையில் வீசப்பட்டது. இந்நிலையில் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் அணையில் ஓராண்டுக்கு மீன்பிடிக்கும் உரிமையை ₹1.25 கோடிக்கு கடந்த ஜூலை மாதம் தனியார் ஒருவர் குத்தகைக்கு எடுத்தார். தற்காலிக ஊழியர்கள் மூலம் மீன்களை பிடித்து விற்று வருகிறார். அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடிப்பவர்களை தடுக்க மல்லிகாபுரத்தை சேர்ந்த சிலம்பரசன்(27) முடியப்பன்(35), சந்தோஷ்(25) சாத்தனூரை சேர்ந்த மூர்த்தி(45) அணை பகுதியை சேர்ந்த செந்தில்(35) உட்பட சுழற்சி முறையில் ஐந்து, ஐந்து பேராக பகல், இரவு என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு சிலம்பரசன் உட்பட 5 பேரும் சாத்தனூர் அணை கரையோரத்தில் ரோந்து சென்றனர்.

வாழையாறு பகுதியில் சென்றபோது எதிரே திருட்டுத்தனமாக மீன்பிடிக்க வந்த 20க்கும் மேற்பட்ட கும்பல் சிலம்பரசன் உட்பட 5 பேரையும் சரமாரி தாக்கியது. இதில் சிலம்பரசன், மூர்த்தி, முனியப்பன் படுகாயங்களுடன் தப்பியோடினர். ஆனால் சந்தோஷ், செந்தில் ஆகியோர் திரும்பி வரவில்லை. இது குறித்து சாத்தனூர் அணை போலீசார், செங்கம் போலீசார், பொதுப்பணித்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அணையில் மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இரவு வெகு நேரம் ஆனதால் தேடும்பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று 2வது நாளாக தேடும் பணி நடந்தது. அப்போது, மதியம் 2 மணியளவில் சந்தோஷ் வாழையாறு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து செந்திலை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். சந்தோஷ் உடலில் காயங்கள் இருந்ததால் அடித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.

இந்நிலையில் கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சந்தோஷ் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்  சாத்தனூர் அடுத்த மல்லிகாபுரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஏடிஎஸ்பி வனிதா உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது பொதுமக்கள் சந்தோஷ், செந்தில் ஆகியோர் கொலை செய்யப்பட்டு உள்ளனர். எனவே கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். இருவரது குடும்பத்திலும் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். நாங்கள் சாத்தனூர் அணையில் அனுமதி பெற்று காலம், காலமாக மீன் பிடித்து தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்துக்கு வழங்கி வருகிறோம். எனவே எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். திருட்டு மீன் பிடிக்கும் 200க்கும் மேற்பட்டவர்களின் பட்டியலை நாங்கள் போலீசாரிடம் வழங்கி உள்ளோம். அவர்களை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: