கொல்கத்தாவில் லட்சக்கணக்கானோர் திரண்ட பிரமாண்ட பொதுக்கூட்டம்... இரண்டாவது சுதந்திர போராட்டத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்து மோடியிடமிருந்து இந்தியாவை மீட்போம்: மு.க.ஸ்டாலின் ஆவேச பேச்சு

சென்னை: வருகிற நாடாளுமன்றத் தேர்தல் இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டம். மதவாத இந்தியாவை உருவாக்கி, 50 ஆண்டு பின்னோக்கித் தள்ள நினைக்கும் மோடியிடமிருந்து, இந்தியாவை அனைவரும் ஒன்று சேர்ந்து மீட்டெடுப்போம் என்று கொல்கத்தாவில் அகில இந்திய தலைவர்கள் பங்கேற்று லட்சக்கணக்கானோர் திரண்ட பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார். மத்திய பாஜ அரசுக்கு எதிராக அகில இந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஓரணியில் திரண்டுள்ளனர். இந்த அணி உருவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்கு வகித்தார். அகில இந்திய அளவிலான எதிர்க்கட்சி தலைவர்களில் 2வது ஆலோசனைக் கூட்டம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமை தாங்கினார். முன்னதாக அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டம் நேற்று காலையில் நடந்தது. மம்தா தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர்.

வங்கமொழியில் பேசிய ஸ்டாலின்: கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று ஆவேசமாக பேசினார். முதலில் தனது பேச்சை அவர் வங்க மொழியில் தொடங்கி சிறிது நேரம் பேசினார். அப்போது பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் பேசியதாவது: வங்கத்துப் புலிகளே பல நூறு மைல்கள் தாண்டி உங்களைக் காண வந்திருக்கிறேன். தூரமாக நாம் இருந்தாலும் ஒரே நேர்கோட்டில் தான் இருக்கிறோம். கொல்கத்தா - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை நம்மை இணைத்திருக்கிறது. தமிழுக்கு மிக நெருக்கமான ஒரு மொழி உண்டென்றால் அது வங்கமொழி தான். தமிழில் அதிகம் மொழி பெயர்க்கப்பட்ட அயல் மொழிகளில் முக்கியமானது வங்க மொழி. வங்கத்து விவேகானந்தருக்கு எங்கள் குமரியில் நினைவகம் அமைத்துள்ளோம். மகாகவி ரவீந்திரநாத் தாகூர் தனது சாந்தி நிகேதன் கல்வி நிறுவனத்தை அமைக்க நிதி திரட்ட தமிழகம் தான் வந்திருந்தார்.

எங்கள் தமிழ்க்கவி பாரதியார் தனது குருவாக ஏற்றுக் கொண்டது வங்கத்தில் வாழ்ந்து வந்த ஐரிஷ் பெண்மணியான நிவேதிதாவைப் பார்த்துத் தான். வங்கத்து நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் மீண்டும் பிறந்தால் தமிழனாக பிறக்க வேண்டும் என்றார். இப்படி அரசியல், இலக்கியம், ஆன்மிகம் அனைத்திலும் தமிழர்களும் வங்காளிகளும் சகோதர, சகோதரிகள். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்த வீரம் மிக்க இனங்களில் வங்க மும், தமிழகமும் முக்கியமானது. இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டத்துக்காக வங்கத்து சகோதரி, இரும்பு பெண்மணி, எளிமையான மனிதர் மம்தா பானர்ஜியின் அழைப்பை ஏற்று நான் வந்திருக்கிறேன். இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டம் தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜன நாயகப் போர்க்களம். இந்தியாவின் ஒற்றுமையைக் குலைத்து, மக்களிடம் மோதல் போக்கை உருவாக்கி, மதவாத இந்தியாவை உருவாக்க நினைக்கும் நச்சு சக்திகளான பாரதிய ஜனதா கட்சியிடம் இருந்து நாட்டை மீட்பது தான் சுதந்திரப் போராட்டம்.

சில மாதங்களுக்கு முன்பு வரையிலும் நரேந்திரமோடி, தனக்கு எதிரியே இல்லை என்று சொல்லி வந்தார். எதிரிகளே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். எதிர்க்கட்சி களே இல்லாத இந்தியா என்று சொல்லி வந்தார். ஆனால் சில வாரங்களாக அவர் எதிர்க்கட்சிகளைத்தான் விமர்சனம் செய்து வருகிறார். எந்தக்கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளைத்தான் திட்டுகிறார். நாம் ஒன்று சேர்ந்தது அவருக்கு பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்பதை விட பயமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தால் நாம் வீழ்ந்து போவோம் என்பது நரேந்திரமோடிக்குத் தெரிந்துள்ளது. அதனால் தான் தினமும் கோபத்தால் நம்மை திட்டுகிறார். பயத்தால் புலம்புகிறார்.

நான் ஆட்சிக்கு வந்தால் தேனாறும், பாலாறும் ஓடும் என்று பொய்யான வாக்குறுதி கொடுத்து, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர் நரேந்திர மோடி. 100 கூட்டம் பேசினார். 1000 பொய்களைச் சொல்லி இருப்பார். அவர் சொன்ன பொய்களில் மிகப்பெரிய பொய், நான் ஆட்சிக்கு வந்தால் வெளிநா ட்டில் வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு வந்து இந்தியர்கள் அனைவருக்கும் அவர்களது வங்கிக்கணக்கில் தலா ₹15 லட்சம் போடுவேன் என்றார். போட்டாரா? இந்திய மக்கள் தலையில் கல்லைத்தான் போட்டார். வாயில் மண்ணைப் போட்டார்.

இது யாருக்கான ஆட்சி? கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. பெரும் நிறுவனங்களுக்கான ஆட்சி. பெரு முதலாளிகளுக்கான ஆட்சி. மக்களுக்கான ஆட்சி அல்ல. இன்னும் சொன்னால், இந்திய அரசாங்கத்தை ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக நரேந்திர மோடி ஆக்கிவிட்டார். ரபேல், ரபேல் என்று 6 மாதமாகச் சொல்லி வருகிறோமே? அது ஊழல் இல்லாமல் வேறு என்ன?  அரசாங்க நிறுவனத்துக்குக் கொடுக்காமல் தனியார் நிறுவனம் பயன் அடைய கொடுப்பது ஊழல் இல்லாமல் வேறு என்ன? விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்வதற்கு முன் மத்திய அமைச்சர் அருண்ஜெட் லியைப் பார்த்துவிட்டுச் செல்கிறார்.

இது ஊழல் இல்லாமல் வேறு என்ன? லலித் மோடியை இந்தியாவை விட்டு தப்பிக்க விட்ட அமைச்சர் சுஷ்மா சுவராஜின் செயல்கள் ஊழல் இல்லையா? நீரவ் மோடியை தப்பவிட்டது ஊழல் இல்லையா? ₹500, 1000 நோட்டுகளை தடை செய்ததன் பின்னணியில் ஊழல் இல்லையா? இது இந்திய வரலாற்றின் கறுப்பு தினம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னாரே? யாருக்காக ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டன? இதன் பின்ன ணியில் யார் இருக்கிறார்கள்? ஊழலைப் பற்றி நரேந்திரமோடி பேசலாமா?

நரேந்திர மோடி ஒரு சிலரைப் பார்த்தால் பயப்படுவார். அப்படி நரேந்திர மோடி பார்த்து பயப்படும் தலைவர்களில் ஒருவர் மம்தா பானர்ஜி. எங்கள் தலைவர் கலைஞர் மீது மிகுந்த மரியாதையும் கொண்டவர் மம்தா பானர்ஜி. கலைஞர் மறைந்த போது உடனே தமிழகத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தியவர் மம்தா. அப்படிப்பட்டவர் அழைப்பை எப்போதும் நான் ஏற்பேன். இன்னும் 5 மாத காலத்துக்கு நாம் அனைவரும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு ஒன்றாகச் சென்று மத்திய அரசுக்கு எதிரான மக்களை அணி திரட்ட வேண்டும்.

பா.ஜ.க வை தனிமைப்படுத்த வேண்டும். பாஜகவை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தனியாக இருந்து அவர்களை வீழ்த்த முடியாது. அது அவர்களுக்கு சாதகமாக ஆகிவிடும். இதனை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். நமது ஒற்றுமை, மோடியை வீழ்த்தும்.நமது ஒற்றுமை, நம்மை வெற்றி பெற வைக்கும். நமது ஒற்றுமை, இந்தியாவைக் காப்பாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: