பிரமாண்ட பேரணியால் குலுங்கியது கொல்கத்தா: 22 கட்சி தலைவர்கள் அணி திரண்டனர்... மோடி அரசை அகற்ற கூட்டாக சபதம்

கொல்கத்தா: மக்களவை தேர்தலில் பா.ஜ அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பிரமாண்ட பேரணியை, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கொல்கத்தாவில் நேற்று நடத்தியது. இதில் 22 கட்சிகளின் தலைவர்கள் அணி திரண்டனர். பேரணியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டதால், கொல்கத்தா நகரமே குலுங்கியது. மோடி அரசை அகற்ற,  தலைவர்கள் கூட்டாக சபதம் எடுத்தனர். மக்களவை தேர்தலில் ஆளும் தே.ஜ கூட்டணிக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து மெகா கூட்டணி உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். இந்த கூட்டணியுடன் இணைந்து செயல்பட காங்கிரசும் தயாராக உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மெகா பேரணியை கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேடு மைதானத்தில் திரிணாமுல் காங்கிரஸ் நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிஜூ ஜனதா தளம், மார்க்சிஸ்ட் தவிர அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.  

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா, சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் சதீஷ் சந்திரா மிஸ்ரா, காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், பா.ஜ எம்.பி சத்ருஹன் சின்ஹா, பா.ஜ.வில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி உட்பட 22 தலைவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில்  லட்சக்கணக்கான பேர் திரண்டனர். இதனால் கொல்கத்தா நகரமே நேற்று குலுங்கியது. இந்த கூட்டத்தில் பேசிய தலைவர்கள் அனைவருமே அடுத்த தேர்தலில் எப்படியாவது பா.ஜ ஆட்சியை அகற்ற வேண்டும் என சபதம் எடுத்தனர்.

கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட சில தலைவர்களை கண்டாலே பிரதமர் நரேந்திர மோடி பயப்படுகிறார். நடக்கப்போகும் மக்களவை தேர்தல் 2வது சுதந்திர போராட்டமாக இருக்கும். இந்துத்துவா மற்றும் தீவிர இந்துமதக் கொள்கை என்ற விஷம் பரவுவதை நாம் தடுக்க வேண்டும். மோடியை தோற்கடித்து, நாட்டை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் நமது வேண்டுகோள். மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு 50 ஆண்டுகள் பின்நோக்கி சென்று விடும். இவ்வாறு அவர் பேசினார்.

 பேரணிக்கு ஐ.மு.கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். சோனியா காந்தி அனுப்பிய தகவலை, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த கூட்டத்தில் வாசித்தார். அதில், ‘‘வரும் மக்களவை தேர்தல் சாதாரண தேர்தலாக இருக்காது. ஜனநாயகத்தின் நாட்டின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் தேர்தலாக இருக்கும். நமது மதச்சார்பின்மையையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்கும். அரசியல் சாசன அமைப்புகளை சீரழிக்க முயலும் சக்தியை தோற்கடிக்கும். கர்வம் நிறைந்த, மக்களை பிரிக்கும் எண்ணம் கொண்ட மோடி ஆட்சிக்கு எதிராக போராட அரசியல் கட்சி தலைவர்களை ஒன்றிணைப்பதில் இந்த பேரணி முக்கியமான முயற்சி. இந்த பேரணி முழு வெற்றி பெற வாழ்த்துகிறேன்’’ என குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் கார்கே பேசியதாவது: எதிர்க்கட்சி தலைவர்களாகிய நாம் ஒன்றிணையும் வரை, நாட்டின் ஜனநாயகத்தையும், மதச்சார்பற்ற தன்மையையும் மோடியும், அமித்ஷாவும் நசுக்குவதை தொடர்ந்து பார்க்க வேண்டியிருக்கும். நானும் சாப்பிட மாட்டேன், மற்றவர்களையும் சாப்பிட விட மாட்டேன் என பிரதமர் ஊழல் பற்றி கோஷமிட்டார். அவர் சாப்பிடவில்லை, ஆனால் அதானி, அம்பானி மற்றும் அவரது தொழிலதிபர் நண்பர்கள் சாப்பிட அனுமதிக்கிறார்.

ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மோடி உறுதி அளித்தார். அந்தவகையில் தற்போது 9.5 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் 1.6 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். பணமதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும், நாட்டில் பொருளாதார பிரச்னையை ஏற்படுத்திவிட்டன. நமது ஒருமித்த இலக்கு வெகுதூரத்தில் உள்ளது. இலக்கை அடையும் பாதை மிக மோசமாக உள்ளது. நம் இதயங்கள் சந்திக்கிறதோ இல்லையோ, நாம் கைகோர்த்து நடக்க வேண்டும். அப்போது தான் நாம் பாதையை கடந்து இலக்கை  அடைய முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

பா.ஜ ஏமாற்றிவிட்டது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ேபசியதாவது: ஊழலற்ற ஆட்சி ஏற்படுத்துவோம், வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்போம், விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு பா.ஜ வாக்குறுதி அளித்தது. ஆனால் அதை நிறைவேற்றாமல் மக்களை பா.ஜ ஏமாற்றிவிட்டது. நரேந்திர மோடி, தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளும் பிரதமராக உள்ளார். செயலாற்றும் பிரதமராக இல்லை. விவசாயிகளை மோடி ஏமாற்றிவிட்டார். எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் கட்சிகளை பழிவாங்க சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரம் மிகப்பெரிய மோசடி. வரும் தேர்தலில் வாக்கு சீட்டுகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்றார்.

பிரதமர் ஆவதற்கு வரவில்லை: தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் பேசுகையில், ‘‘பா.ஜ.வின் 5 ஆண்டு கால ஆட்சியில், மக்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர்.  தொழிற்சாலைகள் எல்லாம் மூடப்படுகின்றன. பலர் வேலை இழந்துவிட்டனர். பா.ஜ.வை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டியது நமது பொறுப்பு. இங்கிருப்பவர்கள் ஒற்றுமையாக இருக்கமாட்டோம் என பா.ஜ.வில் உள்ள சிலர் கூறுகின்றனர். பிரதமர் ஆவதற்காக நாங்கள் இங்கு கூடவில்லை. நான் 4 முறை முதல்வராக இருந்துள்ளேன். மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளேன். நான் எதையும் விரும்பவில்லை. மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை பார்க்க விரும்புகிறேன்’’ என்றார்.

வலுவான மாநில கட்சிகள்: கர்நாடக முதல்வர் குமாரசாமி பேசுகையில், ‘‘கடந்த 70 ஆண்டுகளில் வலுவான மாநில கட்சிகள் உருவாகியுள்ளதை நாடு பார்க்கிறது. தமிழக நலனை காக்க கருணாநிதி பல விஷயங்களை செய்தார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் சிறப்பான செயல்களை செய்து வருகின்றன. மம்தா பானர்ஜி, ஒட்டுமொத்த பெண்களின் முன்மாதிரியாக திகழ்கிறார். ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் பா.ஜ, கர்நாடகத்தில் குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது’’ என்றார்.

புது கூட்டணியால் கவலை: சமாஜ்வாடி  தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், ‘‘சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ்  கட்சியும் ஒன்றாக இணைந்தது நாட்டில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.  இது பா.ஜ.வை கவலையடைச் செய்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் வெற்றி பெற  வியூகம் வகுப்பது குறித்து பல கூட்டங்களை பா.ஜ தொடர்ந்து நடத்தி வருகிறது. எதிர்கட்சிகள் கூட்டணியில் பிரதமர் யார் என பா.ஜ.வினர் கேட்கின்றனர்.  எங்கள் அணியிலிருந்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் முடிவு  செய்வர். அவர்கள் பக்கம் யார் இருக்கிறார்? நரேந்திர மோடி, நாட்டை  ஏமாற்றிவிட்டார். உங்களின் இன்னொரு நபர் யார்? எதிர்க்கட்சிகள் மக்களுடன்  கூட்டணி அமைத்துள்ளோம். ஆனால் பா.ஜ கட்சி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையுடன்  கூட்டணி வைத்துள்ளது’’ என்றார்.

முடிவு கட்ட வேண்டும்: தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா பேசுகையில், ‘‘ஓட்டு இயந்திரம் திருட்டு இயந்திரம். இதன் பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். உலகில் வேறு எங்கும் தேர்தலுக்கு இயந்திரம் பயன்படுத்தப்படவில்லை. வெளிப்படைத்தன்மைக்கு வாக்குச் சீட்டு முறை மீண்டும் கொண்டு வர வேண்டும்.

 காஷ்மீரில் மக்கள் மதரீதியாக பிரிந்திருப்பதற்கு பாஜ தான் காரணம். நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதாவை நிறைவேற்ற முயலும் பாஜ, பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்றவில்லை. வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். பிரதமரை பிறகு தேர்வு செய்து கொள்ளலாம். முதலில் நாம் போராடி பா.ஜ.வை வெளியேற்ற வேண்டும்’’ என்றார்.

துவங்கியது நடவடிக்கை: பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் கலந்து கொண்ட மூத்த தலைவர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசுகையில், ‘‘தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக செயல்படும் பா.ஜ அரசை அகற்றும் நடவடிக்கையை பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணி தொடங்கியுள்ளது. பா.ஜ அரசை தோற்கடிக்க, அம்பேத்கர் ஏற்படுத்திய அரசியல்சாசனத்தை பாதுகாக்க, இந்த வெற்றிகரமான பேரணி முத்திரை பதித்துள்ளது. மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த பா.ஜ, ஆட்சிக்கு வந்தபின் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி என மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டது’’ என்றார்.

சரியான பதிலடி: ஜார்கண்ட் முக்தி மோர்சா தலைவர் ஹேமந்த் சோரன் பேசுகையில், ‘‘பா.ஜ ஆட்சி நாட்டில் வன்முறையை ஏற்படுத்தும். மதவாத சக்திகளுக்கு எதிர்க்கட்சிகளாகிய நாம் சரியான பதிலடி கொடுக்க வேண்டும். மத்தியில் மட்டும் அல்லாமல் மாநிலங்களில் இருந்தும் பா.ஜ ஆட்சியை அகற்ற வேண்டும். தற்போதைய அரசியல் நிலைமை மோசமாக இருப்பதால்தான், இங்கு ஏராளாமான எதிர்க்கட்சி தலைவர்கள் கூடியுள்ளனர். மதவாத சக்திகள் வலுப்பெற்று வருகின்றன. இது அபாயகரமான சூழல். இதை மாற்ற வேண்டியது இளைஞர்களின் கடமை ’’ என்றார்.

எதிர்க்கட்சிகள் குழு

மக்களவை தேர்தலில் எலக்ட்ரானிக் ஓட்டு இயந்திரங்களில் பாஜ முறைகேடு செய்வதை கண்டறிய 4  பேர் கொண்ட குழுவை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அமைத்துள்ளார்.  இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் மானு சிங்வி,  சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியைச்  சேர்ந்த சதீஷ் சந்திர மிஸ்ரா, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.

‘பா.ஜ மீண்டும் வந்தால் ஹிட்லர் ஆட்சிதான்’

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ‘‘நாடு பிரச்னைகளின் மத்தியில் உள்ளது. நாட்டையும், ஜனநாயகத்தையும் காப்பாற்ற மோடி அரசை உடனடியாக மாற்ற வேண்டும். அடுத்த தேர்தலில் பா.ஜ வெற்றி பெற்றால் மோடியும், அமித்ஷாவும் அரசியல்சாசனத்தை மாற்றி நாட்டில் இனிமேல் தேர்தலே நடக்கவிடாமல் செய்து விடுவார்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சி நடத்தியதுபோல் பாசிச ஆட்சிதான் ஏற்படும். மதம் என்ற பெயரில் மக்களிடையே பா.ஜ விரோதத்தை ஏற்படுத்துகிறது. நாட்டை பிளவுபடுத்துவது பாகிஸ்தானின் கனவு. அந்தத் திசையில் பா.ஜ அரசு சென்று கொண்டிருக்கிறது. மதம், மொழி என்ற பெயரில் நாட்டை பிளவுபடுத்துகிறது. கடந்த 5 ஆண்டுகளாக வேலைவாய்ப்பை பா.ஜ உருவாக்கவில்லை. அடுத்த பொதுத் தேர்தலின் குறிக்கோள், அடுத்த பிரதமரை கண்டுபிடிப்பது அல்ல. மோடியையும், அவரது கட்சியையும் நீக்குவதுதான்’’ என்றார்.

‘வேறுபாடுகளை மறக்க வேண்டும்’

மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா பேசுகையில், ‘‘எதிர்க்கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை மறந்து, பா.ஜ.வை எதிர்த்து போராட ஒன்றிணைய வேண்டும். மக்கள் புதிய அரசை விரும்புகின்றனர். பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த பா.ஜ மதச்சார்பற்ற தன்மையையும், அரசியல் சாசன அமைப்புகளையும் அழித்துவிட்டது. பா.ஜ.வுடன் நேரடியாக மோதுவதை உறுதி செய்ய, வரும் தேர்தலில் தொகுதி பங்கீடு மிகப் பெரிய பணி. சிறந்த நிர்வாகம் அமைப்பது குறித்து மூத்த தலைவர்கள் அடங்கிய குழு திட்டம் வகுக்க வேண்டும்.

கூட்டணி அரசு நிலையற்றது, அதனால் எதுவும் சாதிக்க முடியாது என மோடி கூறுகிறார். எனது தலைமையிலான கூட்டணி அரசு 1996-1997ம் ஆண்டு நடத்திய ஆட்சியில்தான் அசாமில் போஜிபீல் பாலம் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தான், பிரதமர் மோடி சமீபத்தில் தொடங்கி வைத்தார். டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் எனது அரசுதான் அனுமதி அளித்தது. 36 கோடி மக்களுக்கு அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் மானிய விலையில் வழங்கப்பட்டது. கூட்டணி அரசால் மக்களின் முன்னேற்றத்தை உறுதி செய்ய முடியும்’’ என்றார்.

காலாவதியான மோடி அரசு

எதிர்க்கட்சிகள் பேரணியில் நிறைவாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதாவது: மத்தியில் பா.ஜ.வின் நாட்கள் எண்ணப்படுகின்றன. நரேந்திர மோடி அரசு காலாவதியாகி விட்டது; இனி மக்களுக்கு தேவையில்லை. பா.ஜ. அரசின் நாட்கள் முடிவுக்கு வருகிறது. இந்தியாவில் புதிய விடியல் ஏற்படும். வரும் மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெறும். பிரதமர் யார் என்று தேர்லுக்குப்பின் முடிவு செய்யப்படும். அரசியலில் மரியாதை நிமித்தம் இருக்கிறது. ஆனால், அதை பா.ஜ பின்பற்றுவதில்லை. பா.ஜ.வுடன் இல்லாதவர்கள் திருடர்கள் என அழைக்கப்படுகின்றனர். தனது சொந்த கட்சியின் மூத்த தலைவர்களையே பா.ஜ மதிப்பதில்லை.

ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி ஆகியோர் பா.ஜ கட்சியில் ஓரம்கட்டப்படுகின்றனர். நாட்டில் தற்போது சூப்பர் எமர்ஜென்சி நிலவுகிறது. இது இந்திராகாந்தி அமல்படுத்திய அவசரநிலையைவிட மோசமானது’’ என்றார். மம்தா தனது உரையை முடிக்கும்போது, ‘‘மாற்றுவோம்...மாற்றுவோம்... டெல்லியில் மத்திய அரசை மாற்றுவோம்’’ என மம்தா முழங்கினார். இறுதியில் இந்த பிரம்மாண்ட பேரணியில் கலந்து கொண்ட எதிர்கட்சி தலைவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த சோனியா காந்தி, ராகுல் ஆகியோருக்கு அவர் நன்றி கூறினார்.

‘எதிர்கட்சிகள் தரப்பில் ஒரே ஒரு வேட்பாளர்’

பாஜ அதிருப்தி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஷோரி பேசுகையில், ‘‘மக்களவை தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்றால் பா.ஜ வேட்பாளர்களை எதிர்த்து, எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே ஒரு வேட்பாளரை களம் இறக்க வேண்டும். அடுத்த தேர்தலில் பா.ஜ.வை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரு இலக்கு மட்டுமே நமக்கு இருக்க வேண்டும்’’ என்றார்.

புள்ளிவிவரத்தில்மோடி அரசு குறும்பு

பா.ஜ.வில் இருந்து வெளியேறிய முன்னாள் மத்திய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஷா பேசுகையில், ‘‘பா.ஜ அரசு தேசத் துரோக அரசு. சுதந்திரத்துக்குப்பின் மக்களை முட்டளாக்குவதற்காக அலங்கரிக்கப்பட்ட, ஊர்தியில் பெரிதாக்கப்பட்ட வளர்ச்சி புள்ளி விவரங்களை வெளியிட்ட முதல் அரசு இதுதான். காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண அனைத்து தரப்பு மக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஆலோசனை கூறினேன். என்னை பாகிஸ்தான் ஏஜென்ட் என்று முத்திரை குத்தினர். எனக்கு தற்போது தனிப்பட்ட எந்த ஆசையும் இல்லை. ஆனால் மக்கள் விரோத அரசை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்’’ என்றார்.

காவலாளி திருடன் ஆனார்

பா.ஜ. அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் பா.ஜ எம்.பி  சத்ருகன் சின்ஹா, யஷ்வந்த் சின்ஹா தொடங்கிய ராஷ்டிரிய மன்ச் அமைப்பின் சார்பில் கொல்கத்தா பேரணியில் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ‘‘இந்த பேரணியில் நான் கலந்து கொண்டபின், நான் பா.ஜ கட்சியில் இருந்து நீக்கப்படுவேன் என எனது அண்ணன் யஷ்வந்த் சின்ஹா கூறினார். அது பற்றி கவலையில்லை என நான் அவரிடம் கூறினேன். வாஜ்பாய் காலத்தில் மக்களாட்சி நடந்தது. தற்போது சர்வாதிகார ஆட்சி நடக்கிறது. ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடி தொடர்ந்து உண்மைகளை மறைத்தால், ‘காவலாளி, திருடனாகிவிட்டார்’ என்றுதான் மக்கள் கூறுவர். நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த, புதிய தலைமை பதவி ஏற்க, இங்கு கூடியிருக்கும் அனைத்து தலைவர்களும் ஒன்றாக செயல்பட வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: