ரூ.15 கோடி கடன் தருவதாக கூறி பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி: 4 பேருக்கு வலை

சேலம்: ஏற்காட்டில் ரூ.15 கோடி கடன் தருவதாக கூறி, கோவையை சேர்ந்த பெண்ணிடம் ரூ.15 லட்சம் மோசடி செய்த 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் 3வது தெருவை சேர்ந்தவர் அனிதாமணி (55). இவர், உடுமலைப் பேட்டை அம்மாப்பட்டி பகுதியில் கேன்சர் உதவி மையம் நடத்தி வருகிறார். இந்த மையத்தை மேம்படுத்துவதற்காக, நிதி நிறுவனம், வங்கிகளில் கடன் கேட்டு வந்துள்ளார். அப்போது அவரது உறவினர் மூலம், கோவை தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த 4 பேரை சந்தித்துள்ளார். அவர்கள், 50 பைசா வட்டிக்கு ரூ.15 கோடி தருவதாக தெரிவித்துள்ளனர். இதற்காக கடந்த 3 மாதமாக அனிதாமணியிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அவர்கள், ஏற்காட்டுக்கு வந்து ரூ.15 கோடியை பெற்றுச்செல்லுங்கள் என அனிதாமணியிடம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ரூ.15 கோடியை பெறுவதற்கு, நீங்கள் முத்திரைதாள் கட்டணம் உள்ளிட்ட ஆவண கட்டணமாக ரூ.15 லட்சம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளனர்.

இதை நம்பிய அனிதாமணி நேற்று தனது மகன் மற்றும் உறவினர்களுடன் காரில் ஏற்காட்டுக்கு வந்துள்ளார். பின்னர், அவர்கள் தங்கியுள்ள தனியார் எஸ்டேட்டிற்கு சென்றார். அங்கு ரூ.15 கோடி கடனுக்கு டாக்குமென்ட் செலவுக்காக ரூ.15 லட்சத்தை அவர்களிடம் அளித்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள், சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு அழைத்து வந்தனர். பின்னர், அனிதாமணியை காரிலேயே இருங்கள், தங்களது வங்கி கணக்கிற்கு இ பேமேன்ட் மூலம் ரூ.15 கோடி வந்து விடும் என கூறி வங்கிக்குள் 4 பேரும் சென்றனர். தனது வங்கி கணக்கிற்கு பணம் வரும் என எதிர்பார்த்து அனிதாமணி காத்திருந்தார். ஆனால் நீண்டநேரமாகியும் வங்கிக்குள் சென்ற 4 பேரும் வெளியே வரவில்லை. பணமும் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அனிதாமணி வங்கிக்குள் சென்று பார்த்தபோது, 4 பேரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களது செல்போனில் தொடர்பு கொண்டபோது, அந்த 4 பேரின் செல்போனும் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால், ரூ.15 லட்சத்தை பெற்றுக்கொண்டு 4 பேரும் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து அனிதாமணி, சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்று கமிஷனர் சங்கரை சந்தித்து புகார் மனு அளித்தார். சம்பவம் நடந்த இடம் ஏற்காடு என்பதால், இதுகுறித்து சேலம் ரூரல் டிஎஸ்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைதொடர்ந்து, சேலம் ரூரல் டிஎஸ்பி சங்கர நாராயணன், ஏற்காடு இன்ஸ்பெக்டர் ஆனந்தன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இதில், அனிதாமணிக்கு ரூ.15 கோடி கடன் தருவதாக கூறி ரூ.15 லட்சம் மோசடி செய்தது கொடைக்கானலை சேர்ந்த சத்தியநாராயணன், கோவையை சேர்ந்த கண்ணன், பாஸ்கர், அருண் என்பது தெரிந்தது. இவர்கள், கடந்த 3 மாதமாக அனிதாமணியிடம் கேரளா, கோவை ஆகிய இடங்களுக்கு வர சொல்லி பேசியுள்ளனர். பின்னர், கடைசியாக ஏற்காடுக்கு வர சொல்லி பணம் தருவது போல் பேசி ரூ.15 லட்சத்தை வாங்கிக் கெகாண்டு மோசடி செய்தது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: