ரஷ்யா, சீனா அச்சுறுத்தலை சமாளிக்க புதிய ஏவுகணைகள் தயாரிக்க முடிவு : அமெரிக்கா அதிரடி

வாஷிங்டன்: ‘ரஷ்யால சீனாவின் சவால்களை எதிர்கொள்ள புதிய ஏவுகணைகள் தயாரிக்கப்படும்’ என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ‘பாதுகாப்பு ஏவுகணை மறுஆய்வு’ என்ற அறிக்கை வெளியிட்டது. அதில், அது கூறியிருப்பதாவது: ரஷ்யாவும், சீனாவும் தொலை தூரம் சென்று தாக்கும் பேரழிவு ஏவுகணைகளையும், அதிவேகத்தில் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணைகளையும் தங்கள் ராணுவத்தில் சேர்த்து வருகின்றன. இது தற்போது இருக்கும் ஏவுகணைகளுக்கு சவால் விடும் வகையில் உள்ளன. இவை அச்சுறுத்தலாக உள்ளதால், இதற்கு அமெரிக்கா தீர்வு காண வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தாக்க வரும் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் வலுவான ஏவுகணைகளையும், எதிரிகளின் ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு முன்பே அவற்றை தாக்கி அழிக்கும் வழிமுறைகளை அமெரிக்கா உருவாக்க வேண்டும். இந்தோ-பசிபிக் மண்டலத்தில் இருந்து அமெரிக்காவை இடம் பெயரச் செய்ய சீனா நினைக்கிறது. சீன ராணுவத்தின் நவீனமயத்தில் ஏவுகணைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை இந்தோ-பசிபிக் மண்டலத்தில் அமெரிக்க ராணுவத்தின் திறனை எதிர்க்கும் வகையில் உள்ளது.

Advertising
Advertising

சீனா தனது ராணுவத்தில், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை 75 முதல் 100 வரை சேர்த்துள்ளது. ரஷ்யா தனது எல்லையை தாண்டி அண்டை நாடுகளின் பகுதிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்து எல்லை பிரச்னைகளை உருவாக்குகிறது. இவற்றில் பெரும்பாலான நாடுகள் அமெரிக்காவின் நட்பு நாடுகள். தெற்கு சீன கடல் பகுதியில் பல தீவுகள் ராணுவ தீவுகளாக மாற்றப்படுகின்றன. பல நாடுகளின் ராணுவ படைகளில் நவீன ஏவுகணைகள் அதிகளவில் சேர்க்கப்படுகின்றன. சீனாவிடம் 125 அணு ஆயுத ஏவுகணைகள் உள்ளன. எனவே, சீனா அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக இருக்க முடியும். இதன் அணு ஆயுதங்கள் வரும் காலங்களில் அதிகரிக்கும். ஏவுகணை தொழில்நுட்பத்தை சீனா இன்னும் மேம்படுத்தி வருகிறது. ஆசிய பகுதிகளில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளின் சுதந்திர செயல்பாட்டை மறுக்கும் நோக்கத்தில் சீனா தனது ஏவுகணைகளை மேம்படுத்தி வருகிறது. ரஷ்யாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணையையும் சீனா அதிகளவில் வாங்கி குவிக்கிறது. அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளை ரஷ்யா தனது முதன்மை அச்சறுத்தலாக கருதி வருகிறது. அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்தவும் ரஷ்யா ஒத்திகை பார்க்கிறது. வடகொரியாவும், அமெரிக்காவுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது. இதனால், அமெரிக்கா விழிப்புடன் இருக்க வேண்டும்.

இந்தியாவுடன் ஆலோசனை

பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தோ-பசிபிக் ராணுவ யுத்தியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. ராணுவ உறவிலும் முக்கிய நட்பு நாடாக உள்ளது. அதனால், ஏவுகணை பாதுகாப்பில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து இந்தியாவுடன் அமெரிக்கா ஆலோசனை நடத்தியுள்ளது’ என கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து 5 பில்லியன் டாலர் மதிப்பில் எஸ்-400 ஏவுகணைகளை வாங்க இந்தியா ஆர்டர் கொடுத்துள்ளது. இதற்கு அமெரிக்கா தனது அதிருப்தியை வெளிப்படையாக தெரிவித்திருந்தது. சீனா எஸ்-400 ஏவுகணைகளை வாங்கி குவிப்பதால், இந்தியாவும் வாங்க இந்த ஏவுகணை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என அமெரிக்காவிடம் மத்திய அரசு தெளிவுபடுத்தியது. இந்நிலையில், ஏவுகணை பாதுகாப்பு குறித்து இந்தியாவிடம் ஆலோசிக்கப்பட்டதாக பென்டகன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: