கொலம்பியாவில் பயங்கரம் போலீஸ் பயிற்சி மையத்தில் கார் வெடிகுண்டு தாக்குதல் : 21 பேர் பலி

போகோடா:  கொலம்பியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 21 பேர் பலியானார்கள். கொலம்பியாவின் தலைநகராக போகோடாவில் போலீஸ் பயிற்சி மையம் இயங்கி வருகிறது. நேற்று காலை உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு இந்த மையத்திற்குள் மர்ம கார் ஒன்று வேகமாக நுழைந்தது. பின்னர், திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கிருந்த பலர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்த 68 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலில் கொல்லப்பட்ட 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. காரில் 80 கிலோ எடை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்றும், காரில் வந்த தற்கொலைப் படை தீவிரவாதி, கார் வெடித்து சிதறியதில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த 16 ஆண்டுகளில் நடந்த தாக்குதல்களிலேயே இதுதான் மிகவும் மோசமான தீவிரவாத தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Advertising
Advertising

இந்த தாக்குதலுக்கு கொலம்பியா அதிபர் இவான் டிகியூ டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கொலம்பியா சோகத்தில் இருக்கிறது. ஆனால், வன்முறைக்கு நாங்கள் தலைவணங்க மாட்டோம். மக்கள் அனைவரும் தீவிரவாதத்தை நிராகரிக்கின்றனர். தீவிரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவோம். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது யார், அவரது கூட்டாளிகள் யார் என அடையாளம் காண வேண்டும். கொலம்பியாவின் எல்லைகள், நகரங்களுக்குள் நுழையும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’ என்று பதிவிட்டுள்ளார். தாக்குதல் சம்பவத்துக்கு காரணமான தீவிரவாத அமைப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. போலீஸ் பயிற்சி மைய தாக்குதலுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: