×

கோவையில் காருடன் நகைக்கடத்தப்பட்ட வழக்கில் சரணடைந்த 2 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

கோவை: கோவையில் காருடன் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள் கடத்தப்பட்ட வழக்கில் சரணடைந்த இருவரை 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 7ஆம் தேதி கேரளாவில் இருந்து கோவையில் உள்ள பிரபல நகைக்கடைக்கு காரில் கொண்டு வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 350 சவரன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை வழக்கில் கொள்ளையர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி நடைபெற்றது. அப்போது கொள்ளையர்கள் கடத்தி சென்ற தனியார் நகை கடையின் கார் மீட்கப்பட்டது. காரில் இருந்து நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு காரை சாலையோரமாக நிறுத்திவிட்டு சென்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த சூழ்நிலையில் கடந்த 10ம் தேதியன்று இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக சென்னையில் 2 பேர் சரணடைந்தனர். அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக கோவை நீதிமன்றத்தில் காக்காசாவடி காவல் நிலைய போலீசார் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த மனுவை விசாரித்த நீதிபதி பாண்டியன், 2 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். மேலும் 2 பேரையும் வருகிற 24ம் தேதி நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என வும் உத்தரவிட்டார். இந்த கொள்ளை சம்பவத்தில் மொத்தம் 15 பேர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்றைய தினம் வேலூரில் 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேரை காவல்துறையினர் பிடித்து வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் திருப்பதி ரயில் நிலையத்தில் நகைகளுடன் சுற்றித்திரிந்த தாய் மற்றும் மகனை திருப்பதி குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துறையினா் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமா, அகமது சலீம் என்பதும், கோவை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : persons , Coimbatore, Jewelry, Police Police, Investigation
× RELATED ஓட்டேரி பகுதிகளில் போதை மாத்திரை விற்பனை: சிறுவன் உட்பட 3 பேர் கைது