புதிய தேர்வு முறையை ரத்து செய்ய கோரி பொறியியல் மாணவர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு

சென்னை : புதிய செமிஸ்டர் முறையை ரத்து செய்ய கோரி சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பொறியியல் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகளில் ஒரு பருவத்தில் தோல்வி அடைந்துவிட்டால் அந்த ஆண்டிலேயே அந்த தேர்வை எழுதி வெற்றி பெற முடியாது. அடுத்த ஆண்டு வரை காத்திருக்க வேண்டும். 2017ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த புதிய தேர்வு முறைக்கு அப்போதிலிருந்தே மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முன்பு திரண்ட மாணவர்கள் பழைய தேர்வு திட்ட முறையை அமல்படுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தோல்வியுற்று தேர்வை எழுத ஓராண்டு வரை காத்திருக்க வேண்டி இருப்பதால் 4ம் ஆண்டை படிப்பை முடித்து மேற்கல்வியையோ வேலையையோ தொடர்வதில் சிக்கல் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவந்துள்ள இந்த புதிய நடைமுறையை கண்டித்து சேலம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதே போன்று மதுரை, ராமநாதபுரம் என பல்வேறு இடங்களில் பொறியியல் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னையில் போராட்டம் நடத்திய மாணவர்களுடன் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்களின் கோரிக்கையை கடிதமாக பெற்று இருப்பதாக தெரிவித்தார். என்ன நோக்கத்திற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்பதை மாணவர்களில் சிலர் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.

மாணவர்களின் கோரிக்கைகளை பெற்று பரிசீலனை செய்வதற்காக குழு அமைக்கப்படும் என்றும் அக்குழுவின் பரிந்துரைப்படியே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் பதிவாளர் குமார் தெரிவித்தார். இதனையடுத்து அண்ணா பல்கலை.யில் போராட்டம் நடத்தி வந்த மாணவர்கள், பதிவாளர் கோரிக்கையை ஏற்று போராட்டத்தை கைவிட்டனர். மேலும் 10 நாட்களில் அண்ணா பல்கலை. உரிய முடிவை எடுக்காவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: