மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன், பெசன்ட் நகரில் 2.5 டன் குப்பைகள் அகற்றம்!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. பொங்கலையொட்டி மெரினாவில் குவிந்த குப்பைகளை இரவு-பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். இதேபோல சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2.5 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. காணும் பொங்கலான நேற்று சென்னையில் மெரினா, வண்டலூர், கிண்டி பூங்காக்கள், தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சி, புத்தகக்காட்சி உள்ளிட்ட இடங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் சென்னை மெரினா கடற்கரைக்கு சென்னைவாசிகள் மட்டுமல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் உபயோகித்த குடிதண்ணீர் பாட்டில், உணவுக் கழிவுகள் ஆகியவற்றை அப்படியே விட்டுச் சென்றதால் ஏராளமான குப்பைகள் சேர்ந்தது. இதனை தொடர்ந்து, கலங்கரை விளக்கம் முதல் அண்ணாசதுக்கம் வரையில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இரவு முதல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

Advertising
Advertising

தற்போது கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, சென்னை மெரினா கடற்கரையில் மட்டும் 9.5 மெட்ரிக் டன் குப்பைகளும், பெசன்ட் நகர் கடற்கரையில் இருந்து 2.5 மெட்ரிக் டன் குப்பைகளும் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளனர். ஊழியர்கள் அல்லாது 7 நவீன ரக குப்பை அள்ளும் எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தடுப்பு வேலிகள், உயர் கண்காணிப்பு கோபுரங்களும் அகற்றப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும் மொத்தம் 42 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. குறிப்பாக மெரினாவில் 27.5 டன் குப்பைகளும், பெசன்ட் நகரில் இருந்து 15 டன் குப்பைகளும் அகற்றப்பட்டுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குப்பைகளின் அளவு குறைவாகவே காணப்படுவதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: